'முகம் சிதைஞ்சு இருக்கு'...'இடது கையில் இருந்த 'டாட்டூ'...'கல்குவாரியில்' அரங்கேறிய பயங்கரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Dec 19, 2019 10:03 AM

கல்குவாரியில் அழுகிய நிலையில் இளம்பெண் உடல் மீட்கப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Young Girl murdered in Vellore, body Recovered in Rotten Condition

வேலூரை அடுத்த புதுவசூர் மலையில் தீர்த்தகிரி முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் மாடு மேய்க்க சென்றவர்கள் அங்குள்ள கல்குவாரியில் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மற்றும் தடய அறிவியல் துறையினர் இளம்பெண்ணின் உடலை ஆய்வு செய்தனர்.

அப்போது முகத்தின் ஒருபகுதி சிதைந்தும், வலதுகால் எலும்பு முறிந்தும் வெளியே தெரிந்தது. அழுகிய நிலையில் உடல் காணப்பட்டதால் இளம்பெண் உயிரிழந்து 2 நாட்களுக்கு மேலாக இருக்கும் என்று தெரியவந்தது. இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர், வேலூர் மாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன இளம்பெண்கள் பற்றி போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ள விபரங்களை சேகரித்தனர். அப்போது 17 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 14-ந் தேதி மாயமானதாக, வேலூர் வடக்கு காவல்நிலையத்தில் கடந்த 16-ந் தேதி புகார் கொடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. 

விசாரணையில், அவர் வேலூரை அடுத்த அரியூர்குப்பத்தை சேர்ந்த சரவணன் மகள் நிவேதா என்பதும், பிளஸ்-2 முடித்திருக்கும் அவர் கடந்த சில மாதங்களாக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை கேன்டீனில் பணிபுரிந்து வந்துள்ளதும் தெரியவந்தது. மேலும், கடந்த 14-ந் தேதி காலை வழக்கம்போல் வேலைக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்ற நிவேதா மாலையில் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் பெற்றோர் தேடியும் அவர் கிடைக்கவில்லை. நிவேதாவின் மொபட் மருத்துவமனை வளாகத்தில் நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து நிவேதாவின் பெற்றோர் 16-ந் தேதி போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து, நிவேதாவின் இடதுகை பெருவிரலில் ஸ்டார் மற்றும் வலதுகையில் பறவையின் சிறகை பச்சை குத்தி இருப்பதாக அவரது பெற்றோர்கள் தெரிவித்தார்கள். இந்த அடையாளங்கள் அனைத்தும் குவாரியில் கிடந்த பெண்ணின் சடலத்தோடு ஒத்துப்போக, இறந்தது நிவேதா என்பது உறுதியானது. இதனைத்தொடர்ந்து நிவேதாவின் உடல் பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அங்கு பெண்ணின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதார்கள்.

இந்நிலையில் 14-ந் தேதி காலை 11 மணிக்கு அலமேலுமங்காபுரம் அருகே நிவேதாவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது காவல்துறையினருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் முதற்கட்ட விசாரணையில் நிவேதா வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அவர் தான் நிவேதாவை இங்கு அழைத்து வந்திருக்க வேண்டும் என காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள். மேலும் இருவருக்கும் நடந்த சண்டையில் வாலிபர் மலைப்பாதையில் இருந்து 80 அடி ஆழமான கல்குவாரியில் நிவேதாவை தள்ளிவிட்டு கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கிடையே நிவேதா பணிபுரிந்த மருத்துவமனை மற்றும் அலமேலுமங்காபுரம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வரும் காவல்துறையினர், நிவேதா கற்பழித்து கொலை செய்யப்பட்டரா? என்பது குறித்து பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என தெரிவித்தார்கள். இளம் பெண் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் வேலூரில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MURDER #SEXUALABUSE #KILLED #POLICE #TAMILNADUPOLICE #ROTTEN CONDITION #VELLORE