‘எனக்கு கண்ணீர் வந்திருச்சு’!.. பள்ளியில் மாணவிக்கு நடந்த ‘பாராட்டு விழா’.. ‘சல்யூட்’ போட வைத்த மாணவியின் செயல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விழுப்புரம் அருகே தொலைந்து பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
விழுப்புரத்தில் உள்ள நகராட்சி உயர்நிலை பள்ளியில் ஷர்மித வர்ஷிணி என்ற மாணவி 7ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல மாணவி பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு நெஞ்சு வலிப்பதாக தலைமை ஆசிரியர் கோவிந்தனிடம் தெரிவித்துள்ளார். உடனே மாணவியின் தந்தைக்கு தொலைபேசி மூலம் தலைமை ஆசிரியர் தகவல் கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து பள்ளிக்கு வந்த வர்ஷிணியின் தந்தை மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக பள்ளி வளாகத்தை விட்டு வெளியே அழைத்து வந்துள்ளார். அப்போது கீழே பர்ஸ் ஒன்று கிடந்ததை வர்ஷிணி பார்த்துள்ளார். உடனே அதை எடுத்து தனது தந்தையிடம் கொடுத்துள்ளார். மகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் அவசரத்தில் பர்ஸை வாங்கி வைத்துக்கொண்டு வேகமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் ஆசிரியர் ஒருவர் தனது பர்ஸ் தொலைந்துவிட்டதாக தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மாணவியை மருத்துவமனையில் காண்பித்துவிட்டு மகள் கொடுத்த பர்ஸை பள்ளி தலைமை ஆசிரியரிடம் கொடுத்துள்ளார். உடனே சம்பந்தப்பட்ட ஆசிரியர் வரவழைக்கப்பட்டு அவரிடம் பர்ஸ் ஒப்படைக்கப்பட்டது. மேலும் பள்ளியின் சார்பில் மாணவிக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்து 2000 ரூபாய் ஊக்கத்தொகையாக கொடுக்கப்பட்டது.
இதுகுறித்து பணத்தை தவறவிட்ட ஆசிரியர் கூறும்போது, ‘அவர்கள் நினைத்திருந்தால் பர்ஸில் இருந்த பணத்தை அப்படியே எடுத்து சென்றிருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. அவர்கள் பணத்தை திருப்பி கொடுத்தப்போது எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. அது பணத்தை திருப்பிக் கொடுத்ததற்காக இல்லை. இந்த உலகில் இன்னும் இப்படிப்பட்ட மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதை நினைத்துதான்’ என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். ஆசிரியரின் பர்ஸில் 35,000 ரூபாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.