‘கண்டிப்பா தந்துடுறேன்டா. நம்புங்கடா...’ ‘நண்பன் என்றும் பாராமல்...’ வட்டியை கொடுக்காததால் நண்பர்கள் சேர்ந்து செய்த காரியம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுனேவில் கடன் வாங்கி, வட்டி தர மறுத்த நண்பனை மற்ற மூன்று நண்பர்கள் பதினொன்றாவது மாடியிலிருந்து தள்ளி விட்டு கொலை செய்த சம்பவம் அக்குடியிருப்பு பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

கணினி தொழில் நுட்பம் அலுவலகம் அதிகம் காணப்படும் புனேவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இன்ஜினியரிங் படித்த நான்கு மாணவர்களான அபினவ் ஜாதவ், அக்ஷய் கோரடே, தேஜய் குஜார், சாகர் சில்வேரி ஆகியோர் ஒன்றாக வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர்.
அவர்களில் சாகர் என்ற இளைஞருக்கு பண நெருக்கடி வரவே, தன்னுடன் தங்கி இருந்த மற்ற மாணவர்களிடம் ரூ.15 ஆயிரத்தை 10 சதவீத வட்டிக்கு கடனாக வாங்கியுள்ளார். சாகரின் நிதி நிலைமை சரி இல்லாத சூழலில் வட்டி பணத்தை தரமுடியாமல் தவித்து வந்த சாகரை, மற்ற மூன்று பேரும் வட்டி பணத்தை தருமாறு வற்புறுத்தி வந்துள்ளனர். அதனால் விரக்தி அடைந்த சாகர் மார்ச் 9ம் தேதி கட்டாயமாக பணம் தந்து விடுவதாக கூறியுள்ளார்.
பணம் வரும் என்று நம்பியிருந்த மற்ற மூன்று நண்பர்களான அபினவ் ஜாதவ், அக்ஷய் கோரடே, தேஜய் குஜார் ஆகியோர் மாலையில் சாகருக்காக அடுக்குமாடி குடியிருப்பின் கீழேயே காத்துக் கொண்டிருந்துள்ளனர். மாலையில் குடியிருப்பு பகுதிக்கு வந்த சாகரிடம் வட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் இல்லை என்று கூறிய சாகருக்கும் நண்பர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்தமிடத்தில் தொடங்கிய இந்த வாக்குவாதம், பதினொன்றாவது மாடியின் பால்கனி வரை நீடித்தது. கோபமடைந்த மூன்று நண்பர்கள் இணைந்து பேசிக்கொண்டிருக்கும் போதே சாகரை, பதினொன்றாவது மாடியில் இருந்து கீழே தள்ளி கொன்றுள்ளனர்.
குடியிருப்பு பகுதி மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அபினவ் ஜாதவ், அக்ஷய் கோரடே, தேஜய் குஜார் ஆகிய 3 பேரையும் கொலை, உடலில் காயம் ஏற்படுத்துதல், மிரட்டல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கொந்துவா போலீசார் கைது செய்துள்ளனர்.
