வழக்கமான ‘தகராறு’ என நினைத்த அக்கம்பக்கத்தினர்... சிறிது நேரத்தில் நடந்த ‘பயங்கரம்’... ‘அடுத்தடுத்து’ கிடைத்த ‘சடலங்களால்’ அதிர்ந்துபோன போலீசார்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Mar 09, 2020 02:38 PM

கேரளாவில் சொத்து தகராறு காரணமாக மனைவி, மகனை வெட்டிக் கொலை செய்துவிட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kerala Ex Military Man Kills Wife Son Commits Suicide In Kollam

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கடைக்கல் அருகே உள்ள வயனம் பகுதியைச் சேர்ந்தவர் சுதர்சனன் (54). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவருக்கு வசந்தகுமாரி (51) என்ற மனைவியும், சுதீஷ் (30) என்ற மகனும் உள்ளனர். இவர்களுக்குள் சொத்து தகராறு இருந்துவந்த நிலையில், இது தொடர்பான வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நடந்து வந்துள்ளது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி 3 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மதியம் இவர்களுடைய வீட்டிலிருந்து தகராறு நடக்கும் சத்தமும், வசந்த குமாரியின் சத்தமும் கேட்டுள்ளது. ஆனால் அதைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் இது வழக்கமான தகராறு தான் என நினைத்துக்கொண்டு இருந்துள்ளனர். அதன்பிறகு சிறிது நேரத்தில் சுதர்சனனின் நண்பர் ஒருவர் அவரை பார்க்க வீட்டுக்குச் சென்றபோது, வீட்டின் ஒரு அறையில் வசந்தகுமாரி வெட்டப்பட்டு ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.

அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் வெளியே ஓடி வந்து அக்கம்பக்கத்தினரிடம் இதுபற்றி கூறியுள்ளார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அவர்கள் சோதனை செய்தபோது, மற்றொரு அறையில் சுதீஷும் கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார். பின்னர் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், வீட்டின் தாழ்வாரப்பகுதியில் சுதர்சனன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார்.

அடுத்தடுத்து கிடைத்த சடலங்களால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவற்றை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாணையில், சொத்து தகராறில் மனைவி, மகனை கொன்றுவிட்டு சுதர்சனன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

Tags : #CRIME #KERALA #MURDER #MONEY #KOLLAM #HUSBAND #WIFE #SON #SUICIDE