'நிலைகுலைந்த ஒட்டுமொத்த குடும்பம்'...'எமனாக வந்த கொடிக்கயிறு'... சென்னையை உலுக்கிய கோரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்துணி காய போட போன சிறுவன், மரணத்தினின் பிடியில் சிக்கிய சம்பவம் சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் அடுத்த புதூர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் லிங்கம். இவர் அதே பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இவருக்கு 10-ம் வகுப்பு படிக்கும் தர்ஷன் என்ற மகன் உள்ளார். இதற்கிடையே நேற்று முன்தினம் வீட்டின் மொட்டை மாடியில் தர்ஷன் மயங்கி கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர், தர்ஷனின் தந்தை லிங்கத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்கள்.
இதையடுத்து லிங்கம் மொட்டை மாடிக்கு சென்று பார்த்தபோது, தர்ஷன் கழுத்தில் கயிறு இறுக்கிய நிலையில் மயங்கி கிடந்துள்ளார். மகன் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ந்து போன அவர், உடனடியாக மகனை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் தர்ஷன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்ட அவர், மருத்துவமனையிலேயே கதறி துடித்துள்ளார்.
இதற்கிடையே சம்பவம் குறித்து அறிந்த அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது மொட்டை மாடியில் தர்ஷன் துணி காயப்போட சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் கொடிக்கயிறு கழுத்தில் இறுக்கி இறந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தர்ஷனின் எதிர்பாராத மரணம் ஓட்டுமொத்த குடும்பத்தையும் நிலைகுலைய செய்துள்ளது.
