‘மெசேஜை’ பார்த்து ‘பதறிப்போய்’ புகார் கொடுத்த பெண்... ‘54 வழக்குகளில்’ தேடப்பட்ட கும்பல்... ‘ஆடம்பர’ வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு செய்துவந்த காரியம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Mar 10, 2020 05:57 PM

போலி ஏடிஎம் கார்டுகள் தயாரித்து அதன்மூலம் மோசடியில் ஈடுபட்டுவந்த நைஜீரிய நாட்டு பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Bengaluru 3 Arrested Including Nigerian Woman For ATM Fraud

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கீதா சிவலிங்கய்யா என்பவருடைய வங்கி கணக்கிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ 49 ஆயிரம் எடுக்கப்பட்டு இருப்பதாக அவருடைய செல்போனுக்கு மெசேஜ் வந்துள்ளது. இதையடுத்து பதறிப்போன அவர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்க, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது கீதா வசிக்கும் பகுதியின் அருகில் உள்ள ஏடிஎம் மையத்திலிருந்து கீதா பெயரிலான போலி கார்டு மூலமாக பணம் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 3 பேரை கைது செய்து விசாரித்துள்ளனர். விசாரணையில், அவர்கள் நைஜீரியா நாட்டை சேர்ந்த அலுகா சன்ட்ரா ஒரேவா (26), ஹென்ரி (25) மற்றும் புனேயை சேர்ந்த விஜய் தாமஸ் (25) என்பது தெரியவந்துள்ளது. அவர்களில் அலுகா, ஹென்ரி இருவரும் படிப்பு தொடர்பான விசாவில் இந்தியாவுக்கு வந்துள்ள நிலையில், பெங்களூரு எலகங்காவில் நண்பர் விஜய் தாமஸ் உடன் தங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். அதற்கு தேவையான பணத்திற்காக பெங்களூரு மற்றும் ராமநகர் மாவட்டத்தில் உள்ள ஏடிஎம் மையங்களில் இருக்கும் இயந்திரங்களில் சிறிய அளவிலான கேமராக்களை பொருத்தி, அதில் பதிவாகும் காட்சிகள் மூலம் ஏடிஎம் எந்திரங்களில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களின் கார்டு குறித்த தகவல்களைத் திரட்டி போலி கார்டு தயாரித்து மோசடி செய்துவந்துள்ளனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஏற்கெனவே அவர்கள் இதுபோன்ற மோசடிக்காக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் 3 பேர் மீதும் ராமநகர் மாவட்டத்தில் மட்டும் 44 வழக்குகளும், பெங்களூரு சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் 6 வழக்குகளும், சித்ரதுர்கா மாவட்டத்தில் 4 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கைதானவர்களிடம் இருந்து 4 பாஸ்போர்ட்டுகள், லேப்டாப்கள், செல்போன்கள், போலி ஏடிஎம் கார்டுகள், சிறிய அளவிலான நவீன கேமராக்கள் அகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Tags : #CRIME #BENGALURU #MONEY #ATM #FRAUD