'தூக்கில்' தொங்கிய 'மனைவி'... 'கதறி' அழுது நாடகமாடிய 'கணவன்'... விசாரித்த 'போலீசாருக்கு' 'ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Mar 17, 2020 10:53 AM

தேனி மாவட்டம் போடியில் தனது மனைவியை குடும்பத்தினருடன் சேர்ந்து கொலை செய்து தற்கொலை என நாடகமாடிய ராணுவவீரர் உட்பட ஆறுபேர் கைது செய்யப்பட்டனர்.

soldier playing a suicide drama in Bodhi murdering his first wife

தேனி மாவட்டம் போடி சந்தனமாரியம்மன் கோயில் ஜெயம்நகர் பகுதியில் வசித்து வருபவர் ராணுவ வீரர் முனீஸ்வரன். இவருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சுப்புலட்சு என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சியாமளா என்ற பெண் குழந்தையும், ராஜேஸ் என்ற ஆண்குழந்தையும் உள்ளனர்.

சமீபத்தில் முனீஸ்வரன் ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்த சுப்புலட்சுமி இரவு தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். தனது மனைவி குடும்ப பிரச்சினையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக ராணுவவீரர் முனீஸ்வரன் கூறி கதறி அழுதார்.

இதுபற்றி போடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சுப்புலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.  இந்த நிலையில் சுப்புலட்சுமி உடல் பிரேத பரிசோதனையில் அவர் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது.இதை தொடர்ந்து முனீஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள்.

அப்போது சுப்புலட்சுமியை கொலை செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். முனீஸ்வரனுக்கும் வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த பெண் கர்ப்பமானதையடுத்து, அவருக்கு வளைகாப்பு நடத்த முனீஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் திட்டமிட்டனர்.

இந்த விவரம் அறிந்த சுப்புலட்சுமி கணவனை கண்டித்து தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த முனீஸ்வரன் சுப்புலட்சுமியை துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். இதற்கு அவரது குடும்பத்தினரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

பின்பு கொலையை மறைக்க சுப்புலட்சுமி உடலை தூக்கில் தொங்க விட்டு தற்கொலை செய்ததாக நாடகம் ஆடியுள்ளனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி முனீஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 6 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ராணுவவீரர் முனீஸ்வரன் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags : #THENI #BODI #SOLDIER #FIRST WIFE #MURDER #PLAYING GAME