‘வேலூரில் கணவரோடு ஒரே சண்டை’... ‘கதறிய தங்கைக்காக’... ‘பெங்களூரில் இருந்து வந்த என்ஜீனியர் அண்ணன்’... 'கடைசியில் நிலைகுலைந்துப்போன குடும்பம்'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 12, 2020 01:03 PM

வேலூர் அருகே தங்கையின் குடும்ப தகராறை தீர்க்க வந்த என்ஜினீயர் அண்ணன் அடித்துக் கொலை செய்யப்பட்டதால், அவரது குடும்பம் அவரை இழந்து நிலைகுலைந்து போயுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bangalore engineer Brother beaten to death in Vellore

வேலூர் சத்துவாச்சாரியை அடுத்த ரங்காபுரம் பூங்காவனத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகணேஷ் (48). இவர் ஆம்பூர் பகுதியில் உள்ள ஒரு தோல் தொழிற்சாலையில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நிர்மலா (45). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளநிலையில், எப்போதும் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

அப்போது பெங்களூருவில் என்ஜினீயராக பணிபுரிந்த நிர்மலாவின் அண்ணன் நந்தகோபாலனிடம் (52) கூறியபோது அவர் சமாதானம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை செல்வகணேஷ், நிர்மலா ஆகியோர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த தங்கை நிர்மலா இதுகுறித்து செல்ஃபோனில் அண்ணன் நந்தகோபாலனுக்கு தகவல் தெரிவித்தார். இதனால் பதறிப்போன அண்ணன் நந்தகோபாலன், ‘பணி முடிந்ததும் உடனே மாலையில் வேலூர் வந்து செல்வகணேசிடம் நியாயம் கேட்கிறேன்’ என்றார்.

அதன்படி இரவு 11 மணி அளவில் வேலூர் வந்த அவர் சமாதானம் செய்வதற்காக தங்கையின் கணவர் செல்வகணேஷ் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது செல்வகணேஷ் மற்றும் அவரது உறவினர்களுக்கும், நந்தகோபாலனுக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த செல்வகணேஷ் மற்றும் அவரது உறவினர்கள் நந்தகோபாலனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் நிலைகுலைந்து அங்கேயே மயங்கி விழுந்தார்.

பின்னர் அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார், நந்தகோபாலின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அடியாட்கள் 3 பேரை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் கூறுகையில், ‘தங்கையின் கணவர் செல்வகணேஷ், அவரது அக்காள் அரசு பள்ளி ஆசிரியையான சாந்தி, அவரது ஆசிரியரான கணவர் ரவி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடி வருகிறோம்’ என்றனர். உயிரிழந்த நந்தகோபாலனுக்கு சுதர்ஷினி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதனால் அவரது குடும்பம் தற்போது நிர்கதியாக்கப்பட்டுள்ளது. குடும்பத்தகராறில் என்ஜினீயர் கொலை செய்யப்பட்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.