‘நான் அத எடுக்கல சார்’!.. ‘அப்பா இல்லாத பையன்’.. 9ம் வகுப்பு மாணவன் எடுத்த முடிவு.. நெஞ்சை உருக்கும் சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 13, 2020 10:31 AM

மண்வெட்டி திருடியதாக ஆசிரியர் திட்டியதால் பள்ளி மாணவன் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Theni school student commits suicide, Police investigate

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள டி.சிந்தலச்சேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் வேல்முருகன்-ஆரோக்கியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு தனுஷ், கவியரசன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இளையமகன் கவியரசன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு வேல்முருகன் இறந்துவிட்டதால், ஆரோக்கியம்மாள் தனியாளாக கூலி வேலை பார்த்து குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு அருகே உள்ள தோட்டம் ஒன்றில் இருந்த இரண்டு மண்வெட்டிகள் காணாமல் போயுள்ளதாக தோட்டத்தின் உரிமையாளர் செபாஸ்டீன், பள்ளி ஆசிரியர் திரவியத்திடம் புகார் கூறியுள்ளார். இதனை அடுத்து பள்ளி மாணவர்களிடம் மண்வெட்டி காணாமல் போனது குறித்து ஆசிரியர் திரவியம் விசாரித்துள்ளார். அப்போது கவியரசனை மண்வெட்டியுடன் பார்த்ததாக சிலர் சொன்னதாக கூறப்படுகிறது.

இதனால் கவியரசனை அழைத்து ஆசிரியர் திரவியம் விசாரித்துள்ளார். ஆனால் மண்வெட்டியை தான் எடுக்கவில்லை என கவியரசன் தெரிவித்துள்ளார். இதனை நம்பாத திரவியம், கடந்த ஒருவார காலமாக கவியரசனை பள்ளியில் பார்க்கும்போதெல்லாம் மிரட்டியும், அடித்தும் வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்துபோன கவியரசன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ஆரோக்கியம்மாள் மகன் தூக்கில் தொங்குவதைப் பார்த்து கதறி அழுதுள்ளார். உடனே அவரை மீட்டு தேவாரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேல்சிகிச்சைகாக தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு கவியரசனை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து மகன் இறந்தது தொடர்பாக ஆசிரியர் திரவியத்தின் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மண்வெட்டி திருடியதாக கூறியதால் 9ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.