'பொள்ளாச்சிக்கு இதுக்காகத் தான் வந்தேன்’... ‘கடைசியில் ஏமாற்றம் தான் மிஞ்சியது’... ‘பி.டெக்., எம்.பி.ஏ. படித்த இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊர் விட்டு ஊர் வந்து பொள்ளாச்சியில் நள்ளிரவில் எச்.டி.எஃப்.சி வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து எம்.பி.ஏ. படித்த இளைஞர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி பேருந்துநிலையம் அருகே உள்ள மில் ரோடு பகுதியில் எச்.டி.எஃப்.சி. வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இங்கு வந்த இளைஞர் ஒருவர், ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றார். அப்போது மும்பையில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு மெசேஜ் சென்றுள்ளது. இதையடுத்து உஷாரான வங்கி அதிகாரிகள் இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு காவல்நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். அந்த நேரத்தில் பணம் எடுக்க முடியாததால் மர்மநபர் ஒருவர் ஏ.டி.எம். இயந்திரத்தை சேதப்படுத்தி விட்டு சென்றது தெரியவந்தது. அப்போது அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் இளைஞர் ஒருவர் காரில் இருந்து இறங்கி முகத்தை பாதியளவு மூடியபடி ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்து கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் கார் பதிவு எண்ணை வைத்து பொள்ளாச்சி பகுதியில் மற்ற போலீசாருக்கு உஷார்படுத்தினர். அப்போது குறிப்பிட்ட காரை போலீசார் சுற்றிவளைத்து மடக்கினர்.
பின்னர் அந்த காரில் இருந்த இளைஞரைர் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ‘‘தேனியை சேர்ந்த ஹரிபிரசாத் (28) என்பதும், பி.டெக்.,எம்.பி.ஏ. படித்த பட்டதாரி என்பதும் தெரியவந்தது. மேலும் ஏ.டி.எம்.மில் கொள்ளையடிப்பதற்காகவே தேனியில் இருந்து பொள்ளாச்சிக்கு காரில் வந்ததாகவும், ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முடியாததால் ஏமாற்றத்துடன் மீண்டும் ஊருக்கு திரும்பி செல்ல முயன்றதாகவும்” தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவர் வந்த காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த இளைஞருக்கு வேறு ஏ.டி.எம். கொள்ளை வழக்கிலும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.