‘குரைக்காத’ நாயால் கிடைத்த ‘க்ளூ’... ‘மெட்டியை’ கூட விட்டுவைக்காமல் செய்த ‘நடுங்கவைக்கும்’ காரியம்... ‘யூடியூப்’ பார்த்தே செய்ததாக ‘அதிர்ச்சி’ வாக்குமூலம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Mar 15, 2020 06:49 PM

தெலுங்கானாவில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேர் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர்

Telangana 2 Men Kill Woman Follow YouTube Video Instructions

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் அருகே உள்ள ஆர்யா நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதி ஸ்ரீனிவாஸ் -  வரலட்சுமி. பில்டிங் கான்ட்ராக்டரான ஸ்ரீனிவாஸ் சமீபத்தில் வெளியே சென்று திரும்பியபோது வீட்டில் மனைவி வரலட்சுமி கழுத்தறுக்கப்பட்டு கால் விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார்.

அதைப் பார்த்துப் பதறிப்போன ஸ்ரீனிவாஸ் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தியுள்ளனர். இதையடுத்து சந்தேகத்தின் பேரில் ஸ்ரீனிவாஸின் கம்பெனியில் வேலைபார்த்த கொத்தனார் பசுலேடி நாகராஜு (23), டிரைவர் நாகேஷ் குமார் (26) என்ற இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்துப் பேசியுள்ள போலீசார், “ஸ்ரீனிவாஸிடம் வேலை செய்துவந்த நாகராஜு மற்றும் நாகேஷ் இருவருக்கும் சில வருடங்களாகவே அவரிடம் சம்பளம் தொடர்பான பிரச்சனை இருந்துவந்துள்ளது. அதனால் இருவரும் ஸ்ரீனிவாஸைப் பழிவாங்க எண்ணி, வரலட்சுமியைத் தாக்கிவிட்டு அவரிடம் இருக்கும் நகைகளைப் பறித்துச் செல்ல வேண்டும் என திட்டம் தீட்டியுள்ளனர். 

மேலும் அதற்காக அவர்கள் கொள்ளை அடிப்பது, கொலை செய்வது தொடர்பான யூடியூப்பில் உள்ள தெலுங்கு டப்பிங் சினிமா ஒன்றையும் பார்த்துள்ளனர். அத்துடன்  கொலை செய்துவிட்டு தப்பிப்பதற்கு வசதியாக அவர்கள் ஹோலி தினத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து திட்டப்படி, சம்பவத்தன்று வரலட்சுமியைக் கொலை செய்துவிட்டு நகைகள், பணம் மற்றும் 2 செல்போன்களையும் அவர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும் காலில் இருந்த மெட்டியைக் கழற்ற முடியவில்லை என கால் விரல்களையும் துண்டாக்கியுள்ளனர்.

கொலைக்கு பின் போலீஸ் கவனத்தை திசை திருப்ப வேண்டுமென அவர்கள் மிளகாய்ப் பொடி, எலுமிச்சை பழம், பவுடர் உள்ளிட்டவற்றை வீடு முழுவதும் தூவிவிட்டு சென்றுள்ளனர். தப்பிச் சென்ற அவர்கள் இருவரும் பின்னர் கூட்டத்தோடு கூட்டமாக உடலைக் காண வந்துள்ளனர். இறுதியாக ஸ்ரீனிவாஸ் வீட்டில் வளர்த்துவரும் நாய் மூலமாகவே கொலையாளிகள் குறித்த துப்பு கிடைத்தது.

சம்பவம் நடந்த அன்று வீட்டில் இருந்த நாய் குரைக்காததை வைத்து தெரிந்தவர்கள் யாரோ தான் கொலை செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரித்தபோதே கொலையாளிகள் இருவரும் சிக்கினார்கள். விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர்களிடம் இருந்தும் கத்தி, நகைகள், பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் நடந்த 24 மணி நேரத்திற்குள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்” எனக் கூறியுள்ளனர்.

Tags : #CRIME #MURDER #ROBBERY #TELANGANA #MONEY #WOMAN #HUSBAND #WORKERS #GOLD