செல்போனுக்கு வந்த ‘ஐ லவ் யூ’ மெசேஜ்.. நண்பனின் ‘காதலுக்காக’ பேசிய மெக்கானிக்.. சேலம் அருகே நடந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நண்பனின் காதலுக்காக பேசிய மெக்கானிக்கை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் சந்தியூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (37). இவர் அப்பகுதியில் டூவிலர் மெக்கானிக் ஷாப் ஒன்றை நடத்தி வந்தார். இவரது நண்பர் ஸ்ரீநாத். இவர் அப்பகுதியில் உள்ள இளம்பெண் ஒருவருக்கு செல்போனில் 'ஐ லவ் யூ' என மெசேஜ் அனுப்பியுள்ளார். உடனே இதனை அப்பெண் தனது உறவினரான ரமேஷ் என்பவரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ரமேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஸ்ரீநாத்தை தாக்கியுள்ளனர்.
இதில் மனமுடைந்துபோன ஸ்ரீநாத் இதுபற்றி தனது நண்பர் மகேஷிடம் தெரிவித்துள்ளார். உடனே ரமேஷையும் அவரது கூட்டாளிகளையும் அழைத்த மகேஷ், இனிமேல் தனது நண்பர் ஸ்ரீநாத்தை தாக்கினால் சும்மா விடமாட்டேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் மெக்கானிக் மகேஷின் மீது ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் கோபத்தில் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மல்லூர் அருகே உள்ள கோயில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு மகேஷ் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரை வழி மறித்த ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் மகேஷை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மகேஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் தனிப்படை அமைத்து ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். நண்பரின் காதலுக்காக பேசிய மெக்கானிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
