‘குளத்தில் குளிக்க சென்ற இளைஞர்’.. ‘வழிமறித்த மர்மகும்பல்’.. நெல்லை அருகே பயங்கரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குளத்தில் குளிக்க சென்ற இளைஞரை வழிமறித்து மர்மகும்பல் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள இடையன்குளம் அடுத்த வடக்கு எருக்கலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேததுரை (32). இவருக்கு யோகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக பைக்கில் சென்றுள்ளார். அப்போது குளத்தின் அருகே மறைந்திருந்த கும்பல் வேததுரையை சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியுள்ளார்.
அப்போது அங்கே ஆட்கள் வந்ததால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வேததுரையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை செய்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியினர் சிலர் குளத்தில் மண் அள்ளியதை வேததுரை தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு வேததுரைக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை காரணமாக வேததுரை கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
