‘தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களின்’... ‘மார்க் ஷீட்டில் இனி இவங்க பேரு இருக்கும்’... ‘கல்வித்துறையில் பல புதிய தகவல்கள் வெளியீடு’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 13, 2020 07:52 AM

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கல்வித்துறை சார்பான பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

Parent\'s name will be included in the Class 10th students Mark Sheet

சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கைகள் குறித்து அத்துறையின் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். அப்போது அவர் பள்ளிக்கல்வித்துறையில் புதிதாக 36 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் சில ‘பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் எளிதில் கிழிக்கமுடியாத வகையில் மற்றும் நீரினால் சேதம் அடையாதவாறு, செயற்கை இழையினாலான மேம்படுத்தப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்கள் மாணவா்களுக்கு வழங்கப்படும்.

மேலும், 10-ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களில் பெற்றோர்களின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்படவுள்ளது என்றார். மேலும், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் என்பதை தனியார் பள்ளிகள் இயக்ககம் என பெயர் மாற்றம் செய்யப்படும்’ என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.

அதேபோல், மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பாடப்பிரிவுகளில் மாணவர்கள் உயர்கல்வியைத் தேர்வு செய்யவும், வேலை வாய்ப்பைப் பெறுவதற்கும் ஏற்ப 3 அல்லது 4 முதன்மைப் பாடங்கள் கொண்ட பாடத்தொகுப்புகளை தேர்ந்தெடுத்துக்கொள்ள வழிவகை செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.  சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில், அனைத்து வகுப்புகளுக்கான பாட புத்தகங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலி வடிவில் உருவாக்கப்பட்டு, 'திக் ஷா' மற்றும், ஆசிரியர் இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்று அவர் கூறினார்.

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தையல், இசை மற்றும் ஓவியம் ஆகிய பாடங்களைப் பயிற்றுவிக்க 8.29 கோடி ரூபாய் மதிப்பில் உபகரணங்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்தார். மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எளிய உரை வடிவில் திருக்குறளை அச்சிட்டு அதனை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்கப்படும் என்றார்.

டி.பி.ஐ. வளாகத்தில் ரூ. 9 இலட்சம் செலவில் நூலகம் அமைக்கப்படும் என்றும், 120 மாதிரி பள்ளிகளில், நூல்கள், வார இதழ்கள் மற்றும் நாளிதழ்கள் கொண்ட தகவல் களஞ்சியங்கள் ரூ. 30 இலட்சம் செலவில் ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து நூலகங்களிலும், குடும்ப நூலக உறுப்பினர் அட்டை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.