‘பாதி உசுராத்தான் அவன் அம்மா வாழ்ந்துட்டு இருந்தாங்க’... ‘16 வருடங்கள் கழித்து தாயை சந்தித்த இளைஞர்’... ‘கண் கலங்க வைக்கும் பாசம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீட்டை விட்டுச் சிறுவனாக ஓடிய சிறுவன் 16 வருடங்களுக்குப் பிறகு இளைஞராக வீடு திரும்பிய நிலையில், அவரைக் கட்டிப் பிடித்துக்கொண்டு தாய் கதறியழுத சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு மேலையூர் கீழத் தெருவைச் சேர்ந்தவர்கள் நாகமுத்து-வளர்மதி தம்பதி. விபத்து ஒன்றில் நாகமுத்து இறந்துவிட, 16 வருடங்களுக்கு முன்பு மூத்த மகன் வெற்றிச்செல்வன், பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஓடிவிட்டார். அதன்பிறகு எங்கு தேடியும் கிடைக்காததால், இறந்துவிட்டதாக எண்ணியிருந்த நிலையில் தான், அந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து, காணாமல் போன வெற்றிச் செல்வனின் சித்தப்பா பிச்சமுத்து கூறுகையில், ‘வீட்டில் தலச்ச மகன் காணாமல் போனதில் பாதி உசுராத்தான் அவன் அம்மா வாழ்ந்துட்டிருந்தாங்க. இந்தநேரத்தில்தான் சென்னை கோயம்பேடு காவல்நிலையத்திருந்து கடிதம் வந்தது. உங்க மகன் பிரச்னை ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறான், வந்து அழைத்துச் செல்லுங்கள் எனக் கூறப்பட்டிருந்தது. இதைக் கேட்ட தாய் வளர்மதி, என் பையன் எந்தத் தப்பும் செஞ்சிருக்க மாட்டான்.
எத்தனை வருஷமானாலும் அவன் என்னைப் பார்க்க வருவான்னு நினைச்சேன். நான் வேண்டிய சாமி என்னையும் என் புள்ளையையும் கைவிடவில்லை. உடனே அவன அழைச்சிட்டு வாங்கன்னு சொன்னார். பின்னர் நானும் அவன் தம்பியும் கூப்பிடப் போனோம். எங்ககிட்ட பேசின போலீசாரும், இன்னொருத்தன் செஞ்ச பிரச்னைக்கு இவன் மாட்டிக்கிட்டான். ஜாமீனில் அவனை அழைத்துச் செல்லுங்கள் எனக் கூறி தேவையான உதவிகளையும் செஞ்சாங்க. இதையடுத்து அவனை ஊருக்கு அழைத்து வந்தோம். அவன் அம்மாவைக் கண்டதுமே ஓடிச்சென்று கட்டியணைச்சுட்டு, என்னை மன்னிச்சுடும்மான்னு அழுதான்.
அம்மாவப் பார்க்கணும் என ஒருநாள் கூட உனக்கு தோணலையாப்பா எனத் தலையைக் கோதிவிட்டபடியே கண்கள் கலங்கக் கேட்ட அவன் அம்மா, உன்கூட பொறந்தவங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகி குழந்தைகள் இருக்கு. நீ எப்படிப்பா இருக்க என பாசமுடன் அவனுடைய அம்மா கேட்டார். எனக்கு சென்னையில் ஆதரவா இருந்த சகாயராணி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறிய வெற்றி, நான் வந்துவிட்டேன். இனிமேல் உன்னைக் கண்கலங்காமல் கஷ்டப்படாமல் பார்த்துக் கொள்வேன்னு உறுதி கொடுத்தான். நீ வந்ததே எனக்குப் போதும்பா’ எனப் பெருந்தன்மையுடன் கூறினார் வளர்மதி’ என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். 16 வருஷம் கழிச்சு தாயை பார்க்க மகன் வருகிறார் என்று தெரிந்ததும் அவரைப் பார்க்க தெருவே கூடி நின்னுள்ளது.
Credits: Vikatan