8 நாளா ஒரே இடத்தில் நிற்கும் ‘யானை’.. மரத்தில் ஏறி கண்காணிக்கும் வனத்துறையினர்.. கண்கலங்க வைக்கும் பாசப்போராட்டம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Feb 25, 2020 04:02 PM

இறந்த குட்டியை விட்டு செல்ல மனமில்லாமல் 8 நாள்களாக ஒரே இடத்தில் நிற்கும் தாய் யானையின் செயல் அனைவரையும் உருக வைத்துள்ளது.

Elephant roaming its cub dead body 8th day in Gudalur forest

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள வனப்பகுதியில் கடந்த 17ம் தேதி யானைக்கு கூட்டம் ஒன்று மேய்ச்சலுக்கு வந்துள்ளது. அப்போது குட்டியானை ஒன்று சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. யானைகள் கூட்டமாக ஒரே இடத்தில் நீண்ட நேரமாக நிற்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அந்த இடத்துக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது ஒரு குட்டியானை இறந்து கிடப்பதை பார்த்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்

தகவலறிந்து வந்த வனத்துறையினர், இறந்த குட்டியை மீட்க முயன்றுள்ளனர். ஆனால் யானைக்கூட்டம் அவர்களை அருகில் நெருங்க விடாமல் துரத்தியுள்ளது. இதனால் குட்டியை மீட்கும் முயற்சியை பாதியிலேயே வனத்துறையினர் விட்டுச் சென்றனர். பின்னர் அடுத்த நாள் வந்து பார்த்துபோது தாய் யானை மட்டும் குட்டியின் அருகில் அழுதபடி நின்றுகொண்டு இருந்துள்ளது.

அப்போதும் குட்டியின் அருகே யாரையும் வரவிடமால் தாய் யானை துரத்தியதால், யானையை தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறையினர் முடிவு செய்தனர். இதனை அடுத்து தாய் யானையை கண்காணிப்பதற்காக இரண்டு வனத்துறை ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் 8 நாள்களாகியும் குட்டியை விட்டு செல்லாமல் அழுதுகொண்டே அதன் அருகில் நிற்கும் செயல் தங்களையும் கண்கலங்க செய்வதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அதிகாலை நேரத்தில் தாய் யானை குட்டியின் அருகில் நிற்பதில்லை. சுமார் 300 மீட்டர் தொலைவில் பசுந்தழைகளை தின்றுகொண்டு இருக்கிறது. இதனால் அந்த சமயம் குட்டியின் சடலத்தை மீட்க வனத்துறையினர் முயன்றனர். ஆனால் வனத்துறையினர் வருவதை அறிந்த தாய் யானை வேகமாக ஓடி வந்து குட்டியின் அருகில் நின்றுவிடுதால் குட்டியானையின் சடலத்தை மீட்க முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சுமார் 500 மீட்டர் தொலைவில் வனத்துறை அதிகாரிகள் மரத்தின் மீது ஏறி பைனாகுலர் மூலம் தாய் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். 8 நாள்களாக இறந்த குட்டியை விட்டுச் செல்ல மனமில்லாமல் அதன் அருகிலேயே நிற்கும் தாய் யானையின் பாசம் காண்போரை கலங்க செய்கிறது.

Tags : #ELEPHANT #MOTHER #CUB #GUDALUR #FOREST