‘கள்ளக்காதலுக்கு தாய் இடையூறு’.. ‘தூக்கமாத்திரை கொடுத்து’.. ‘சேலையால் வாயைப் பொத்தி’.. சேலத்தில் நடந்த கொடூரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தாயை தூக்கமாத்திரை கொடுத்து மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை காமராஜர் காலணி சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மனைவி நல்லம்மாள் (65). இவருக்கு சிவக்குமார் (47) என்ற மகனும், லதா என்ற மகளும் உள்ளனர். இதில் சிவக்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. லதாவிற்கு திருமணமாகி காமராஜர் காலணியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக கிடந்த தாய்க்கு உணவு கொடுப்பதற்காக மகள் லதா வந்துள்ளார். அப்போது வாயில் துணி திணிக்கப்பட்ட நிலையில் தாய் மர்மமான முறையில் இறந்துகிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனிடையே தாயை கொலை செய்துவிட்டதாக அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் சிவக்குமார் சரணடைந்துள்ளார்.
அவரிடன் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. அதில் அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்ற பெண்ணுடன் கடந்த 15 ஆண்டுகளுக்கு சிவக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இதனை அடுத்து அவரை அடிக்கடி சிவக்குமார் தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இதனை அவரது தாய் நல்லம்மாள் கண்டித்துள்ளார்.
இதனால் அவரை கொலை செய்ய முடிவெடுத்த சிவக்குமார், நல்லம்மாளுக்கு தூக்கமாத்திரை கொடுத்து, சேலையால் முகத்தையும், வாயையும் பொத்திக் கொலை செய்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தின்போது அப்பெண் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நல்லம்மாளின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தாயை மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
