‘பாக்குற எங்களுக்கே கண்கலங்குது’!.. ‘5 நாளாச்சு, எதுவும் சாப்பிடல’.. காட்டுக்குள் அழுதுகொண்டே நிற்கும் யானை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இறந்த குட்டியை விட்டுச் செல்ல மனமில்லாமல் 5 நாட்களாக அதன் அருகிலேயே அழுதபடி நிற்கும் தாய் யானையின் செயல் காண்போரை கலங்க வைத்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பள்ளிப்பட்டி பகுதியில் கடந்த வாரம் யானைக் கூட்டம் ஒன்று மேய்ச்சலுக்கு வந்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக குட்டியானை ஒன்று சேற்றில் சிக்கியுள்ளது. உடனே யானைகள் குட்டியை மீட்க போராடியுள்ளது. வழக்கத்து மாறாக யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் வந்து பார்த்துபோது குட்டியானை ஒன்று சேற்றில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் இறந்த குட்டியானையின் உடலை மீட்க முயன்றுள்ளனர். ஆனால் ஆக்ரோஷமாக இருந்த யானைகள் யாரையும் அருகில் வர விடமால் துரத்தியுள்ளது. இதனால் வனத்துறையினர் குட்டியானையை மீட்கும் முயற்சியை கைவிட்டனர். அடுத்து நாள் வந்து பார்த்தபோது மற்ற யானைகள் அங்கிருந்து சென்றுள்ளன. ஆனால் தாய் யானை மட்டும் குட்டியை விட்டு நகராமல் அருகிலேயே கண்களில் கண்ணீர் வழிய நின்றுகொண்டு இருந்துள்ளது.
இதனால் அன்றும் குட்டியை மீட்கும் முயற்சியை கைவிட்ட வனத்துறையினர், தாய் யானையை தொந்தரவு செய்ய வேண்டாம் என எண்ணி, யானை அங்கிருந்து செல்லும் வரை காத்துள்ளனர். இதற்காக இரண்டு வனத்துறை ஊழியர் கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் 5 நாட்களை கடந்தும் தாய் யானை தனது குட்டியை விட்டு செல்ல மனமின்றி உணவு, தண்ணீர் கூட அருந்தாமல் அதே இடத்தில் நிற்கும் செயல் கண்கலங்க வைப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தெரிவித்த வனத்துறையினர், பொதுவாக குட்டி இறந்தால் தாய் யானை ஒன்று அல்லது இரண்டு நாட்கள் அதன் அருகிலே நிற்கும். உடல் அழுகத் தொடங்கினால் தாய் யானை அங்கிருந்து நகர்ந்து சென்றுவிடும். ஆனால் இந்த யானை உணவு, தண்ணீர் அருந்தாமல் 5 நாட்களை கடந்தும் கண்களில் நீர் வழிய நிற்கும் செயல் நம்மையும் கலங்க வைக்கிறது. இது தொடர்ந்தால் தாய் யானையின் உடல் பாதிக்கப்படும் என எண்ணி தர்பூசணி உள்ளிட்ட பழங்களை அருகில் வைத்துவிட்டு வருகிறோம் என தெரிவித்துள்ளனர். இறந்த குட்டியைவிட்டு செல்ல மனமில்லாமல் 5 நாட்களாக அழுதபடி நிற்கும் தாய் யானையின் பாசம் அனைவரையும் கண்கலங்க செய்கிறது.