‘பைக்கில் போனபோது நொடியில்’... ‘புதுமணத் தம்பதிக்கு நேர்ந்த விபரீதம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Sep 19, 2019 10:25 AM
விழுப்புரம் அருகே திருமணமாகி ஒருவார காலமே ஆனநிலையில், நடந்த சாலை விபத்தில், புதுமணப் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சியை அடுத்த மாதவச்சேரியைச் சேர்ந்தவர் பொறியாளரான பாலமுருகன். இவருக்கும் செம்படாக்குறிச்சியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பருக்கும், கடந்த 7 நாட்களுக்கு முன்னர்தான் முன் திருமணம் நடைப்பெற்றது. இந்நிலையில், புதன்கிழமை மாலை புதுமணத் தம்பதிகளான பாலமுருகன், பிரியதர்ஷினி மற்றும் அவரது தம்பி சந்தோஷ் ஆகிய மூவரும், ஒரே இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சி நோக்கி சென்றுள்ளனர்.
இருசக்கர வாகனத்தை சந்தோஷ் ஓட்டிவர, பின்னால் பாலமுருகனும், அவரையடுத்து பிரியதர்ஷினியும் அமர்ந்து சென்றுள்ளனர். கள்ளக்குறிச்சி அம்மன்நகர் அருகே வந்தபோது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் இவர்களது வாகனம் மீது மோதியது. இதில், புதுமணப் பெண்ணான பிரியதர்ஷினி சாலை நடுவே தூக்கியெறியப்பட்டார். புது மாப்பிள்ளை பாலமுருகனும், சந்தோஷும் சாலையோரமும் விழுந்தனர். சாலை நடுவே விழுந்த பிரியதர்ஷினி மீது இதனைக் கவனியாது அவ்வழியாக வந்த லாரி ஏறியது.
இதில் பிரியதர்ஷினி உடல்நசுங்கி உயிரிழந்தார். பாலமுருகன், சந்தோஷ் மற்றும் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த நாராயணன் என்பவரும், லேசான காயங்களுடன் விழுந்து கிடந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், மூவருமே தலைக்கவசம் அணியவில்லை என்று கூறப்படுகிறது. இந்ச சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.