சுபஸ்ரீ மரணம்: ஆளும்கட்சியோ,எதிர்க்கட்சியோ யார் பேனர் வைத்தாலும் ஓராண்டு சிறை-கலெக்டர் அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manjula | Sep 15, 2019 12:42 PM
இளம்பெண் சுபஸ்ரீ(23) மரணத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பேனர் கலாச்சாரத்துக்கு எதிராக மக்கள் கொந்தளித்து வருகின்றனர். அரசியல் கட்சிகள் பேனர் வைக்க வேண்டாம் என அறிவிப்புகளை வெளியிட்டு வரும் அதே வேளையில்,முன்னணி நடிகர்களும் தங்கள் விழாக்களுக்கு பேனர்கள் வைக்க வேண்டாம் என ரசிகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் பேனர் வைத்தால் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என, மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,''போக்குவரத்துக்கு இடையூறாகப் பேனர்களையோ, 'சுலோகன்' பொறித்த பதாகைகளையோ வைக்கக் கூடாது.பிரதான சாலைகளின் இரு புறமும், நடைபாதைகள், சாலையின் நடுவிலும், கல்வி நிறுவனம், வழிப்பாட்டு தலம், மருத்துவமனை, நினைவுச் சின்னம், சிலைகள், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பிற இடங்களிலும் கூட அங்கீகரிக்கப்பட்ட எந்தவோர் அரசியல் கட்சியினரும் பேனர்களை வைக்கக் கூடாது.
தற்காலிக விளம்பரப் பலகைகள் வைக்கக் கால அளவு 6 நாள்கள் மட்டுமே. இரண்டு விளம்பரப் பலகைகளின் இடையே 10 மீட்டர் இடைவெளி விடவேண்டும். பொதுமக்கள் பேனர்கள், பதாகைகள் குறித்து அந்தந்தப் பகுதி உள்ளாட்சி அலுவலர், காவல் ஆய்வாளரிடம் புகாராக தெரிவிக்கலாம்.விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி ஓராண்டு சிறைத்தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கச் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பேனர் விவகாரத்தில், வேலூர் மாவட்டத்தை ஒரு முன்மாதிரியாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்கவேண்டும்,'' என அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
