'எதேச்சையாக குழந்தை செய்த காரியம்'.. பரிதாபமாக பலியான இளம் தாய்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்!
முகப்பு > செய்திகள் > உலகம்By Siva Sankar | Sep 12, 2019 04:47 PM
கடந்த ஆகஸ்டு மாதம் 31-ஆம் தேதி, தனது 21-வது பிறந்த தினத்தை, தன் தோழிகள் புடைசூழ கொண்டாடிவிட்டு வீடு திரும்பியிருக்கிறார் யூலியா ஷர்கோ என்கிற இளம் பெண். இவர் தனது பிஎம்டபுள்யூ காரின் முன் இருக்கையில் வந்துள்ளார். வீடு திரும்பியதும் யூலியா மட்டும் காரில் இருந்து இறங்கியுள்ளார்.
காரின் மறுபுறமாக வந்து, காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த தனது 2 வயது மகளை, காரின் ஜன்னல் வழியே தூக்க முயன்றுள்ளார் யூலியா. காரின் கதவைத் திறக்காமல், குனிந்து ஜன்னலுக்குள் தலையைவிட்டு, குழந்தையை வெளியில் எடுக்க முயற்சித்தபோது, எதேச்சையாக காரின் ஆட்டோமேட்டிக் ஜன்னல் கண்ணாடி அடைப்பானின் பட்டனை அழுத்தியுள்ளது குழந்தை. அந்த நேரத்தில்தான் துரதிர்ஷ்டவசமாக யூலியாவின் கழுத்து கார் ஜன்னில் சிக்கியது.
இதனால் யூலியா ஒன்றும் செய்ய முடியாமல் அப்படியே மயக்கம் போட்டு விழுந்துள்ளார். சிறிது நேரத்தில், தனது மனைவியக் காணவில்லை என்று வீட்டினுள் இருந்து வெளியே வந்த யூலியாவின் கணவர், இந்த துர் சம்பவத்தைக் கண்டதும் அதிர்ந்துபோய், மருத்துவமனைக்கு தகவல் அளித்தார்.
ஆனாலும், நினைவு திரும்பாததாலும் மூளைக்கான ஆக்சிஜன் தடைபட்டதாலும் ஒரு வாரம் யூலியாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சைப் பலனின்றி யூலியா பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அவரின் குடும்பத்தாரை உலுக்கியுள்ளது.