'வலிக்குது என்ன விட்டுருங்க'...'தங்கச்சி ஸ்கெட்ச் போட்டு கொடுக்க'...'காதலன் அரங்கேற்றிய கொடூரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 08, 2020 05:46 PM

வாழ்க்கையில் நடக்கும் பல சம்பவங்கள் தான் சினிமாவில், காட்சிகளாக வருகிறது. ஆனால் சில சமயம் சினிமாவையே மிஞ்சும் சில விஷயங்கள் நிஜ வாழ்க்கையில் நடக்கத் தான் செய்கிறது. அவ்வாறு அக்காவை கொலை செய்ய தங்கையே பிளான் போட்டு கொடுத்துள்ள கோர சம்பவம் அரங்கேறியுள்ளது.

Namakkal : School Girl killed her sister with the help of boy friend

நாமக்கல் என்.கொசவம்பட்டி தேவேந்திரபுரத்தை சேர்ந்தவர் சங்கரன். இவருக்கு மோனிஷா மற்றும் 17 வயது நிரம்பிய மகள் என இருவர் உள்ளனர். இதில் மோனிஷா அருகிலுள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் உள்ள அறை ஒன்றில் தனியாக இருந்த மோனிஷாவின் இடது கையில் பிளேடால் அறுத்த காயம் இருந்தது. மயங்கிய நிலையில் இருந்த அவரை உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதையடுத்து வேட்டாம்பாடி கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் நாமக்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது மோனிஷாவின் பிரேத பரிசோதனை அறிக்கையும் வந்தது. அதில் மோனிஷா கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. வீட்டில் இருந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்தது யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டார்கள்.

அப்போது மோனிஷா கொலை வழக்கில் 17 வயது நிரம்பிய அவரது தங்கை மற்றும் தங்கையின் காதலனும், பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவருமான ராகுலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து  அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில், ''மோனிஷாவின் வீட்டின் அருகில் வசித்து வரும் ராகுலும் பிளஸ்-2 படித்து வரும் மோனிஷாவின் தங்கையும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

ராகுல், மோனிஷாவின் தங்கைக்கு அண்ணன் முறை ஆவார். இருவரின் காதல் விவகாரம் மோனிஷாவுக்கு தெரிய வந்ததும், இது முறையற்ற காதல், எனவே ராகுலை மறந்து விடு என தங்கைக்கு அறிவுரை கூறியுள்ளார். ஆனால் அதனை கேட்காத மோனிஷாவின் தங்கை ராகுலுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் மகளின் காதல் முறையற்ற காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவர, அவர்களும் இரண்டாவது மகளுடன் பேசாமல் வெறுப்புடன் இருந்து வந்து உள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மோனிஷாவின் தங்கை, மோனிஷா உயிருடன் இருந்தால் நம்மால் சேர்ந்து வாழ முடியாது என கருதி, அவரை கொலை செய்ய காதலன் ராகுலுடன் திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த 4-ந் தேதி பெற்றோர் வீட்டில் இல்லாத நிலையில் மோனிஷா, அவரது தங்கை ஆகிய இருவர் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த ராகுல், தனது காதலியுடன் சேர்ந்து மோனிஷாவை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

அப்போது கதறிய மோனிஷா என்னை விட்டு விடுங்கள் என கெஞ்சியுள்ளார். ஆனால் தனது சொந்த அக்கா என்று கூட பார்க்காமல், கதற கதற மோனிஷாவை காதலனுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் கொலையை மறைக்க மோனிஷாவின் இடது கையில் பிளேடால் அறுத்து அவர் தற்கொலை செய்து கொண்டது போல நாடகமாடி உள்ளனர்.

இந்த நாடகம் பிரேத பரிசோதனையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பதின் பருவத்தில் வந்த முறையற்ற காதலால் தங்கையே காதலனுடன் சேர்ந்து அக்காவை கொலை செய்துள்ள சம்பவம், அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.