மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
இந்தியளவில் கேரளா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்கள் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. நாளுக்குநாள் அங்கு நிலைமை மோசமாவதால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தென்மும்பை பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. இதையடுத்து மாநகராட்சி கல்வி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த மாணவனுடன் தேர்வறையில் நெருங்கிய தொடர்பில் இருந்த 36 மாணவர்கள் மற்றும் 8 ஆசிரியர்களை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவனின் தந்தை துபாயில் இருந்து வந்துள்ளார். அவரிடம் இருந்து மாணவனுக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. தற்போது முதல்கட்ட சோதனையில் மாணவனுடன் தேர்வெழுதிய 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.