'நீ எல்லாம் ஒரு அப்பாவா'... 'குடும்பமே இப்படி உருக்குலஞ்சு போச்சே'...சென்னையில் நடந்த பயங்கரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுகுடிக்க பணம் கேட்டு தகராறு செய்த தந்தை, பெற்ற மகனையே வெட்டிய நிலையில், அவரை மற்றொரு மகன் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, எண்ணூர் அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்தவர் நாகராஜ். லாரி ஓட்டுநரான இவருக்குத் திருமணமாகி தையல் நாயகி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்குச் சேதுபதி, தமிழ்ச்செல்வன் என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நாகராஜ், கடந்த 2016-ம் ஆண்டு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்காகத் தனது 80 வயது தாத்தாவை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த வழக்கில் சிறைக்குச் சென்றுவிட்டு ஜாமீனில் வெளியே வந்து உள்ளார். இதனால் குடும்பமே நிலைகுலைந்து போனது.
தற்போது ஜாமீனில் வெளியே வந்த பின்னர், கடந்த 3 மாதங்களாக வேலைக்கு எதுவும் போகாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த நாகராஜ், எனக்கு மீண்டும் குடிக்க வேண்டும் எனவே பணம் கொடு என மனைவியிடம் கத்தியைக் காட்டி தகராறு செய்துள்ளார். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த சட்டக்கல்லூரி மாணவனான இளைய மகன் தமிழ்ச்செல்வன், நீ எல்லாம் ஒரு அப்பாவா, அம்மாவையே இப்படி மிரட்டுகிறாயே எனத் தந்தையைக் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ், மகன் என்றும் பாராமல் கத்தியால் அவரது கையில் வெட்டினார். இதில் அவருக்குக் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. தடுக்க வந்த தாய் தையல் நாயகிக்கும் காயம் ஏற்பட்டது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மூத்த மகன் சேதுபதி, அம்மா, தம்பியையே கொலை செய்ய முயல்கிறாயா என்ற கோபத்தில், தந்தையின் கையிலிருந்த கத்தியைப் பறித்து, நாகராஜை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த நாகராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் சேதுபதி, எண்ணூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுபற்றி எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சொத்துக்காகத் தனது தாத்தாவையே வெட்டிக்கொலை செய்த நாகராஜை, தற்போது அவரது மகனே வெட்டிக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
