‘காதலித்த பெண்ணை 2-வதாக திருமணம் செய்த அண்ணன்’... ‘தவறான பழக்கத்தால்’... ‘குழந்தைகளுக்கு சித்தப்பாவால் நேர்ந்த கொடூரம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 25, 2020 01:14 AM

விளாத்திகுளத்தில் காதலித்த பெண்ணையே திருமணம் செய்த அண்ணன் மனைவியுடன், தனிமையில் இருந்ததை அண்ணனின் குழந்தை பார்த்ததால் கிணற்றில் தள்ளி கொன்றேன் என்று கைதான சித்தப்பா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Two Children Killed by Uncle Statement in Vilathikulam

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன்பொம்மையா புரத்தைச் சேர்ந்தவர் ஜோதிமுத்து (40). லாரி ஓட்டுநரான இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி உஷாராணி. இவருக்கு சீமான் அல்போன்ஸ் மைக்கேல் (14) என்ற மகனும், 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். 2-வது மனைவி மகாலட்சுமி, உஷா ராணியின் தங்கை ஆவார். இவரது மகன் எட்வின் ஜோசப் (9).

ஜோதிமுத்துவின் தம்பி ரத்தினராஜ் (37). லாரி ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளநிலையில், மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இவர் நேற்று முன்தினம் அண்ணனின் மகன்கள்  2 பேரையும் ஊருக்கு தெற்கு பகுதியில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக அழைத்து சென்றார். அதன் பின்னர் மூவரும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன உறவினர்கள் சம்பவ  இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது கிணற்றின் அருகே சிறுவர்களின் செருப்பு, சட்டைகள் இருந்தன.

இது குறித்து விளாத்திகுளம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, இறந்த நிலையில் கிடந்த சிறுவர்கள் 2 பேரின் உடல்களை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையே  இது தொடர்பாக ரத்தினராஜ் அயன்பொம்மையாபுரம் கிராம நிர்வாக அலுவலர் பால்ராஜிடம் சரணடைந்தார்.  பின்னர் அவரை விளாத்திகுளம் போலீசார் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் பரபரப்பு வாக்குமூலம்  கொடுத்தார். அதில்,

எனது அண்ணி உஷாராணியின் தங்கை மகாலட்சுமி எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவார். இதில் அவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டு அவரை நான் கோவைக்கு அழைத்து சென்றேன். இதனை அறிந்த எனது அண்ணன் கோவைக்கு வந்து எங்களை அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அண்ணன் எங்களை கண்டித்தார். மேலும் மகாலட்சுமியை அவரே 2-வது திருமணம் செய்து கொண்டார். எனக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைத்தார். திருமணமான பின்னரும், நானும் மகாலட்சுமியும் பழகி வந்தோம். வீட்டில் யாரும் இல்லாதபோது நாங்கள் அடிக்கடி தனிமையில் இருந்தோம்.

தற்போது பள்ளி விடுமுறை விட்டதால் பிள்ளைகள் வீட்டில் இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நானும் மகாலட்சுமியும் தனிமையில் இருந்ததை சீமான் அல்போன்ஸ் மைக்கேல் பார்த்து என் அண்ணனிடமும், எனது தாயாரிடமும் சொல்லி விட்டான். இதனால் என்னை அனைவரும் கண்டித்தனர். அதன்பின்னர் மகாலட்சுமி என்னிடம் பேசுவதை நிறுத்தினார். இதற்கிடையே எனது மனைவி என்னை பிரிந்து சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான் சீமான் அல்போன்ஸ் மைக்கேல் மற்றும் மகாலட்சுமியை கொலை செய்ய கடந்த ஒரு வாரமாக திட்டம் போட்டு காத்திருந்தேன்.

நேற்று முன்தினம் சீமான் அல்போன்ஸ் மைக்கேல், எட்வின் ஜோசப் ஆகிய 2 பேரும் கிணற்றில் குளிக்க அழைத்து செல்லுங்கள் சித்தப்பா என்று என்னை கேட்டனர். இதனை நான் பயன் படுத்திக்கொண்டேன். அந்த 2 பேரையும் கிணற்றில் குளிக்க அழைத்து சென்று அங்கு அவர்களை தண்ணீரில் தள்ளி கொலை செய்தேன்.  பின்னர் ஊருக்கு அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று பதுங்கினேன். பயத்தில் இருந்த நான் சரண் அடைந்து விட்டேன்’ இவ்வாறு அவர் வாக்கு மூலம் அளித்துள்ளார். ரத்தினராஜ் குடிப்பழக்கம் மற்றும் அண்ணியுடன் தவறான உறவு இருந்தது தெரியவந்ததால் அவரது மனைவி ஏற்கனவே பிரிந்து சென்றுள்ளார்.