'ஊரடங்கின்' போது பயங்கரம்... வீட்டில் 'டிவி' பார்த்து கொண்டிருந்த... 'பிளஸ்-2' மாணவியை கொலை செய்த தந்தை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Apr 07, 2020 05:16 PM

வீட்டில் டிவி பார்த்துக்கொண்டு இருந்த பிளஸ் 2 மாணவியை அவரது தந்தையே அடித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Plus 2 Student killed near Thoothukudi, Police Arrested father

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி தாஸ் (40) இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் சமீபத்தில் தான் பிளஸ் 2 தேர்வை எழுதினார். அந்தோணி தாஸ்க்கு மனநலம் தொடர்பான பிரச்சினை இருந்ததால் அவரை புளியம்பட்டி பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் வைத்து அவரது குடும்பத்தினர் பராமரித்து வந்தனர்.

தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு அறிவித்ததை தொடர்ந்து அந்தோணி தாஸ் அவரது வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். தன்னுடைய வீட்டிலோ அல்லது தெருக்களிலோ யாராவது சத்தமாக பேசினால் அந்தோணி தாஸ் தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்திருந்து இருக்கிறார். இதனால் அவரை தனி அறை ஒன்றில் வைத்து பராமரித்து வந்தனர்.

இந்த நிலையில் சம்பவ தினமான நேற்று மதியம் அவரது மூத்த மகள் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அந்தோணி தாஸ் மகளிடம் தகராறு செய்துள்ளார். இதனால் அவரது மகள் வீட்டைவிட்டு வெளியில் சென்று விட்டார். தொடர்ந்து மீண்டும் வீட்டிற்கு வந்த அவரது மகள் டிவியை ஆன் செய்து பார்க்க ஆரம்பித்து இருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்தோணி அங்கு இருந்த கம்பு ஒன்றை எடுத்து சரமாரியாக அவரது மகளை தாக்கி இருக்கிறார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி மருத்துவமனையிலும் அவர் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சிகிக்சை பலனின்றி அவர் இறந்தார். இதையடுத்து மகளை கொலை செய்த குற்றத்திற்காக போலீசார் அந்தோணி தாஸை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.