‘கோயில் குளத்தில் மூழ்கிய தாய்’! ‘தாயை காப்பாற்ற குளத்தில் குதித்த 7 வயது மகள்’! இருவரும் தண்ணீரில் மூழ்கிய பரிதாபம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 11, 2019 11:26 AM

குளத்தில் குளிக்க சென்ற தாய், மகள் தண்ணீர் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Mother and her child dies due to drowning in pond in Sirkazhi

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த உமையாள்பதி கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாந்தி, தனது 7 வயது மகள் வைஷ்ணவியுடன் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை இருவரும் ஊரில் உள்ள கோயில் குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக குளத்தின் ஆழமான பகுதியில் சாந்தி சிக்கியுள்ளார். இதனைப் பார்த்த மகள் வைஷ்ணவி அம்மாவை மீட்க குளத்தில் குதித்துள்ளார். அப்போது இருவரும் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால் இருவரும் குளத்தில் மூழ்கிய சம்பவம் யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது.

இதனிடையே வைஷ்ணவி பள்ளிக்கு வராததால் அவரை தேடி பள்ளியில் இருந்து வந்துள்ளனர். வீடு பூட்டி இருந்ததால் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் துணி துவைக்க குளத்துக்கு சென்றிருப்பதாக சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால் குளத்தில் துணிகள் மட்டுமே இருந்துள்ளது. இதனை அடுத்து அவர்கள் குளத்தில் மூழ்கி இருப்பது தெரியவந்துள்ளது.

உடனே இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்துக்கு பின் இருவர் உடலையும் மீட்டனர். குளத்தில் குளிக்க சென்ற தாய், மகள் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SIRKAZHI #MOTHER #CHILD #DIES #DROWNING #POND