‘வீடு திரும்பாத 12 வயது சிறுவன்’... ‘நண்பர்களால் நேர்ந்த பரிதாபம்’... ‘அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 10, 2019 08:47 PM

12 வயது சிறுவன் தனது நண்பர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12 year old boy killed by his friends due to competition

திருச்சி அரியமங்கலம் திடீர் நகர் பெரியார் தெருவைச் சேர்ந்தவர்கள் அலியார் - மெகர் நிஷா தம்பதியினர். இவர்களது மகன் அப்துல் வாகித் (12), அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், படிப்பு சரியாக வராததால், இடையில் படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வந்தான். இந்நிலையில், கடந்த 3-ம் தேதி மாலை 7 மணியளவில், தனது தாயிடம் 10 ரூபாய் வாங்கிச்சென்ற சிறுவன் அப்துல் வாஹித், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால், கடைசியில் காவல் நிலையத்தில் கடந்த 6-ம் தேதி புகார் தந்தனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார், சிறுவனை தேடி வந்தனர். அப்போது அப்துல் வாஹித், அதேப் பகுதியை சேர்ந்த ரவுடிகளான முத்துக்குமார், இளவரசன், சரவணன் உள்பட 2  சிறுவர்களுடன் சேர்ந்து சுற்றி திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் விசாரித்ததில், பன்றி வளர்ப்பு தொழில் செய்து வரும் முத்துக்குமாருக்கும், அதேப் பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவருக்கும் தொழில் போட்டி இருந்துள்ளது. முத்துக்குமார் கும்பலுடன் சுற்றித் திரிந்த சிறுவன் அப்துல் வாஹித், இங்குள்ள ரகசியங்களை எதிர் தரப்பான சிலம்பரசன் கும்பலுக்கு அவ்வப்போது கூறி வந்ததாக தெரிகிறது.

இந்த விவகாரம் முத்துக்குமார் கும்பலுக்குத் தெரியவரவே, சிறுவன் அப்துல் வாஹித் மீது அவர்கள் ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.இந்நிலையில், கடந்த 3-ம் தேதி அரியமங்கலம் குப்பைக்கிடங்கு அருகே, பன்றி பண்ணையில் முத்துக்குமார் கும்பல் மது அருந்திக் கொண்டிருந்தபோது, சிறுவன் அப்துல் வாஹித் அங்கு வந்துள்ளான். தங்களது ரகசியங்களை எதிர் தரப்பிடம் சொல்கிறாயா எனக் கேட்டு அவனை சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் தன் பாலின உறவுக்கு அழைத்து, சிறுவன் ஒத்துக்கொள்ளாததால் அடித்ததாகவும் தெரிகிறது.

இதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே அப்துல் வாஹித் உயிரிழந்திருக்கிறான். அதன்பின்னர், அவனது உடலை தூக்கி குப்பை மேட்டில் புதைத்துவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன், தலைமறைவான முத்துக்குமாரை தேடி வருகின்றனர். கொலை செய்த விவகாரத்தில், 5 பேரில் 4 பேர் 20 வயதை தாண்டாதவர்கள். மாயமான சிறுவன் நண்பர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MURDER #BOY #MOTHER #FATHER #FRIENDS