'மகளின் கல்யாணத்துக்கு வாங்கியது'... ‘விரக்தியில் இருந்த பால் ஏஜென்ட்’... ‘மனைவியுடன் எடுத்த விபரீத முடிவு’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 11, 2019 11:21 AM

மகள் திருமணத்திற்கு வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாத மன விரக்தியில் மனைவியுடன் பால் ஏஜென்ட் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

husband wife committed suicide due to debt of daughter\'s wedding

சேலம் சூரமங்கலம் ஜாகீர் ரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணி (56). இவருடைய மனைவி கண்மணி (49). இவர்களுக்கு பரமேஸ்வரி (31), வளர்மதி (26) என 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி சென்றுவிட்டனர்.  மணி வீடு வீடாக சென்று பால் வியாபாராம் செய்து வருகிறார். மேலும்  தங்களது வீட்டின் முன்பு, ஒரு கடை வைத்து, அதில் ஆவின் பால் வாங்கி விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை அன்று அதிகாலை, இவர்களது கடை முன்பு ஆவின் பால் பாக்கெட்டுகள் இறக்கி வைக்கப்பட்டு அப்படியே இருந்தது.

வழக்கம்போல், இவர்களது கடைக்கு பால் வாங்கிச் செல்பவர்கள் வந்துள்ளனர். ஆனால், வெகுநேரம் காத்திருந்தும் வீடும், கடையும் திறக்கப்படாததால், கதவை தட்டிப் பார்த்துவிட்டு, மணியின் தம்பி பன்னீர்செல்வத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்தபோது, வீடு உள்புறம் தாழிடப்பட்டிருந்ததால், ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார். அப்போது மணி மற்றும் கண்மணி ஆகியோர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று இருவரின் உடல்களை கீழே இறக்கி, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், தனது 2-வது மகள் திருமணத்திற்காக, ரூ.5 லட்சத்திற்கு மணி கடன் வாங்கியுள்ளார். இதனால் மணியிடம் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். ஆனால் அவர் பணம் கொடுக்க முடியாமல் தவித்து வந்துள்ளார். வாங்கிய கடனை எப்படி அடைக்க போகிறேன் என உறவினர்களிடம் கூறி மனவருத்தத்தில் இருந்து வந்துள்ளார். 

மேலும், கடந்த திங்கள் கிழமை அன்று, மணியின் வீட்டை, கடன் கொடுத்தவர்கள் பூட்டி சாவியை எடுத்து சென்றதாகவும், கால அவகாசம் கேட்டு, பணத்தை தந்துவிடுவதாக கூறி மணி சாவியை திரும்ப பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான், இந்த தம்பதி தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்துள்ளது. இருவரின் உடல்களையும் பார்த்து மகள்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் கதறி அழுதனர். கந்துவட்டி காரணமா என இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #SUICIDE #WEDDING #MARRIAGE #DAUGHTER #HUSBANDWIFE