“வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது!”.. “தீவிர கண்காணிப்பில்”.. “சீனாவில் இருந்து வேலூர் வந்த 2 பேர்”!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சீன அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் சீனாவில் மட்டும் இந்த வைரஸ்க்கு நூற்றுக்கணக்கான பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் சீனாவிலிருந்து கேரளாவிற்கு வந்த மாணவி ஒருவருக்கு வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனை அடுத்து சீனாவில் இருந்து தமிழகம் வரும் நபர்களின் விவரங்களை அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் வேலூர் கஸ்பாவை சேர்ந்த மாணவர் ஒருவர் 2 நாட்களுக்கு முன்புதான் சீனாவில் இருந்து சென்னை வழியாக வேலூர் வந்திருக்கிறார்.
அவரின் வீட்டுக்கு சென்று பரிசோதனை செய்து அதிகாரிகள் அந்த மாணவருக்கு கொரோனா வைரஸின் அறிகுறி இல்லை என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டனர். அதே சமயத்தில் அந்த மாணவரிடம் வீட்டிலிருந்து வெளியில் செல்லக்கூடாது என்றும் உடலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுவதாக தெரிந்தால் உடனடியாக தங்களை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தி விட்டு வந்துள்ளனர்.
இதேபோல் வேலூர் பகுதியைச் சேர்ந்த மேலும் ஒருவரும் 2 நாட்களுக்கு முன்பு சீனாவில் இருந்து வந்துள்ளார். அவருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்று கண்டறிந்த சுகாதாரத்துறையினர் அவரையும் தீவிரமான கண்காணிப்பில் வைத்துள்ளனர். வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை அளிப்பதற்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
