'நாங்க ரெண்டு பேர்'...'எங்களுக்கு பயம்னா என்னன்னு தெரியாது'...வசமாக சிக்கிய 'சமையல் மாஸ்டர்கள்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Dec 18, 2019 04:24 PM

காட்பாடியில் ஒரு ஆண்டாக போலி சி.பி.ஐ. அதிகாரிகளாக வலம் வந்த சமையல் மாஸ்டர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Cooking Masters arrested for Cheating as CBI Officer

வேலூரை அடுத்த காட்பாடி பகுதியில், விருதம்பட்டு காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பைக்கில் வந்த இரண்டு இளைஞர்களை நிறுத்திய காவலர்கள், லைசென்ஸ் உள்ளிட்ட உரிமங்களைக் கேட்டனர். உடனே கோபமடைந்த இருவரும் நாங்க யார் தெரியுமா; சி.பி.ஐ அதிகாரிகள்; எங்க வண்டியையே மடக்குறீயா’ என்றுகூறி அடையாள அட்டைகளைக் காண்பித்து போலீஸாரை மிரட்டியிருக்கிறார்கள்.

ஆனால் இருவரின் நடத்தையும் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் அவர்கள் வந்த பைக்கில் `ஆர்மி’ என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, ''வாங்க நாம போலீஸ் ஸ்டேஷன் போய் நிதானமாக பேசலாம்'' என அழைத்து சென்ற காவலர்கள் இருவரையும் தங்களது பாணியில் கவனித்தார்கள். அப்போது தான் அவர்களின் விவரம் குறித்து தெரிய வந்தது. அதில், விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த மதீன் கழிஞ்சூர் பன்னீர்செல்வம் தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் ஆகியோர் என்பதும், இருவரும் போலியான சி.பி.ஐ அதிகாரிகள் என்றும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது மதீன், சதுப்பேரி பகுதியில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் கேன்டின் வைத்திருப்பதும், அவரிடம், ஹரிஹரன் 4 ஆண்டுகளாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இருவரும் வாட்டசாட்டமாக இருப்பதால் சி.பி.ஐ அதிகாரிகள் என கூறி பணக்காரர்களிடம் பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார்கள்.

மேலும் தங்களை ஐ.பி.எஸ் ஆபீஸர் என்று கூறிக் காவல் சீருடையில் இருப்பதைப்போன்ற படங்களை ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அதேபோன்று  சி.பி.ஐ-யில் ஹரிஹரன் உதவி ஆணையராகவும் மதீன் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிவதாகவும் அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்துள்ளனர். மிடுக்கான தோற்றத்துடன் பணக்காரர்கள் தொழிலதிபர்களின் வீடுகளுக்கு ரெய்டுக்குச் சென்றுள்ளனர்.

இதற்கிடையே இருவரையும் சி.பி.ஐ அதிகாரிகள் என நம்பி பலர் பணம் கொடுத்து ஏமாந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதற்கிடையே வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த, வட்டார போக்குவரத்து அலுவலரையே மிரட்டிய அதிர்ச்சி தகவலும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து விருதம்பட்டு பகுதியில் இரண்டு பேரும் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்தியதில் காவல் சீருடைகள், ரூ.4.70 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளார்கள்.

மேலும் சி.பி.ஐ அதிகாரிகள் என்று போலியாக தயாரித்துவைத்திருந்த அடையாள அட்டைகளைப் பறிமுதல் செய்த காவல்துறையினர் இருவரது பின்னால் இன்னும் சிலர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக வந்து காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #POLICE #CBI #FAKE CBI OFFICERS #VELLORE #COOKING MASTERS