‘இவரோட ஐபிஎல் அணியில் ஆட ஆசை’... ‘நியூசிலாந்து அணியில்’... நட்சத்திர வீரராக கலக்கும் வேலூர் பையன்’!
முகப்பு > செய்திகள் > உலகம்தமிழ்நாட்டின் வேலூரைப் பூர்விகமாகக் கொண்ட இந்திய வம்சாவளி வீரரான ஆதித்யா அசோக், நியூசிலாந்து அண்டர்-19 கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக கலக்கி வருகிறார்.

வேலூரில் பிறந்த ஆதித்யா அசோக்கின் தாயார் செவிலியராக உள்ளார். ஆதித்யா அசோக்கிற்கு 4 வயது இருக்கும்போது, நியூசிலாந்துக்கு குடி பெயர்ந்துள்ளனர். ரேடியோகிராஃபரான இவரது தந்தை, கிரிக்கெட்டின் மீது அதீத ஆர்வம் கொண்டவர். இதனால் இவரது தந்தை இவருக்கு, கிரிக்கெட் ஆசை எனும் விதையை விதைத்துள்ளார். தன் மகனுக்காக வீட்டின் பின்புறம் சிறிய கிரிக்கெட் மைதானத்தை அமைத்துக் கொடுத்துள்ளார்.
மிகச்சிறந்த லெக் ஸ்பின்னராக உருவாகி வரும் ஆதித்யா அசோக், கடந்த 2015-ல் ஆஸ்திரேலியாவில் நடந்த இண்டோர் யு-13 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக இருந்துள்ளார். இவருக்கு முன்னாள் நியூசிலாந்து பவுலர் தருண் நெதுல்லா என்பவர் லெக் ஸ்பின் பயிற்சியளித்துள்ளார். தற்போது நியூசிலாந்து ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியில் கலக்கி வரும், ஆதித்யா அசோக்கிற்கு இரண்டே இரண்டு லட்சியங்கள்தான் வாழ்க்கையில் உள்ளது.
ஒன்று நியூசிலாந்து அணியின் சீனியர் டீமில் சேர்ந்து டெஸ்ட் போட்டிகளில் ஆட வேண்டும். இரண்டாவது ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனியின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆட வேண்டும் என்பது தான் அவரது ஆசை. நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனை மிகவும் விரும்புவதாகக் கூறும் ஆதித்யா அசோக், அவர் ஒரு ஜென்டில்மேன் என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் தன் ரோல் மாடல் சுவிஸ் டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் தான் என்று ஆதித்யா அசோக் கூறியுள்ளார்.
