'வேலூரில் 'அனகோண்டா' பாம்பா'?...'எச்சரித்த வனத்துறை'...பார்ப்பதற்கே பகீர் கிளப்பும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Dec 04, 2019 04:11 PM

குடியாத்தம் பகுதியில் அனகோண்டா பாம்பு உள்ளதாக சமுக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் வீடியோவால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Kudiyatham: Forest Dept Clarifies on Video Showing Anaconda\'s Presence

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தமிழக-ஆந்திரா மாநில எல்லை பகுதிகளில் அமைந்துள்ளது மோர்தானா அணை. ஆந்திராவில் பெய்யும் கனமழை காரணமாக மலை பகுதி வழியாக மோர்தானா அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணைக்கு, மலை பகுதிகளில் இருந்து பாம்பு போன்ற உயிரினங்கள் அடித்து வரப்படுவது வழக்கம்.

இந்நிலையில் அணைக்கு பின் பகுதியில் உள்ள காட்டு பகுதியில், ராட்சத மலைப் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை இளைஞர்கள் சிலர் படம் பிடித்துள்ளனர். அது ஏதோ ஒரு விலங்கை முழுசாக விழுங்கி விட்டு,  அசைய முடியாமலும், வேகமாக செல்ல முடியாமலும் இருப்பது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் குடியாத்தம் பகுதிகளிலுள்ள வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

இது அனகோண்டா பாம்பு என வாட்ஸ்அப்பில் பரவியதால் அந்த பகுதி விவசாயிகள் அச்சமடைந்தார்கள். இந்நிலையில் இதுகுறித்து குடியாத்தம் வனத்துறை அதிகாரிகள், '' சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் பாம்பு அனகோண்டா வகையை சேர்ந்தது இல்லை. அது பெரிய அளவிலான மலைப்பாம்பு.

இருப்பினும் மலைக்கிராமங்களில் உள்ளவர்கள் ஆடு, மாடு கோழிகள் உள்ளிட்டவற்றை கண்காணித்துக் கொள்ள வேண்டும். விறகுகளை வெட்டவோ, ஆடு மாடுகளை மேய்க்கவோ மாலை நேரங்களில் தனியாக யாரும் காட்டு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்க விடுத்துள்ளனர்.

Tags : #FOREST DEPARTMENT #ANACONDA #VELLORE #KUDIYATHAM #SNAKE