'கேன்சர் உள்ளிட்ட கொடிய நோய்களை ஏற்படுத்தும்... ரசாயனம் கலந்த '2 டன் மீன்கள்' பறிமுதல்'!... பதைபதைக்க வைக்கும் வியாபார உத்திகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சடலங்களை பதப்படுத்தும் 'பார்மலின்' ரசாயனத்தை 2 டன் மீன்களுக்கு பயன்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கரிமேடு சந்தையில், தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் மீன்கள் விற்பனைக்கு வருகின்றன. இதைத் தொடர்ந்து, அங்குள்ள 72 கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில் 2 டன் மீன்கள், நண்டுகள் உள்ளிட்டவற்றில் பார்மலின் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சவக்கிடங்கில் உடல்கள் கெட்டுப்போகாமல் பதப்படுத்த பார்மலின் பயன்படுத்தப்படுகிறது. பார்மலின் பூசுவதால் மீன்கள் 15 நாட்கள் வரை கெட்டுப்போகாது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், பார்மலின் தடவிய மீன்களில் ரசாயன வாடை வீசாது என்றும் கூறுகின்றனர். இந்த ரசாயனம் கலந்த மீன்களை உட்கொள்வோருக்கு ஒவ்வாமை வாந்தி, தலைவலி சோர்வு, மந்த நிலை உள்ளிட்டவை ஏற்படும் என்றும் கிட்னி பாதிப்பு கேன்சர் உள்ளிட்ட அபாயகரமான நோய்களுக்கும் வழிவகுக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரிமேடு மீன் மார்க்கெட்டில் வெளி மாநில மீன்கள் தரம் குறைந்தும், கெட்டுப்போன நிலையிலும் இருந்தும் கண்டறியப்பட்டதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, தமிழகம் முழுதும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் இணைந்து தொடர் ஆய்வுகளை மேற்கொள்ளவும், தரம் குறைந்த மீன்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் மீன் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
