‘ஒருவாரமாக தனிமைப்படுத்தப்பட்ட’.... ‘சொகுசு கப்பலில்’... ‘மதுரையைச் சேர்ந்த ஒருவர் உள்பட’... ‘தமிழர்கள் 6 பேர் உள்ளதாக தகவல்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடுக்கடலில் தனிமைப்படுத்தப்பட்ட கப்பலில் உள்ள இந்தியர்களில், தமிழர்கள் 6 பேர் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டைமண்ட் பிரின்சஸ் (Diamond Princess) என்ற சொகுசு கப்பல், ஹாங்காங்கிலிருந்து கடந்த பிப்ரவரி 3-ம் தேதி ஜப்பான் திருப்பியது. இதில் பயணம் செய்த ஹாங்காங்கை சேர்ந்த 80 வயது முதியவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், ஜப்பான் வந்த கப்பல் யோகோஹமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. கப்பலில் உள்ள ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு தினமும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதுவரை 135 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 3700 பேருடன் வந்த இந்தக் கப்பலில் 138 இந்தியர்கள் உள்ளனர். இவர்களில் 132 பேர் கப்பல் பணியாளர்களும், 6 பேர் பயணிகளும் உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான பயணிகளுடனேயே இருப்பது பயமாக இருப்பதாக கடந்த 2 நாட்களுக்கு முன்னர் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒருவர், தங்களை மீட்குமாறு ஃபேஸ்புக்கில் வீடியோ மூலம் உருக்கமான கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில், கொரோனா பாதிப்பால் ஒருவாரமாக தனிமைப்படுத்தப்பட்ட இந்த சொகுசு கப்பலில், மதுரையை சேர்ந்த ஒருவர் உள்பட 6 தமிழர்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் தங்களது சொந்த நாட்டுக்கு திரும்ப உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
