14 வருஷத்துக்கு முன் காணாமல் போன ‘தாய்’.. ‘உதவிய பாதிரியார்’.. அம்மாவை ‘கட்டிப்பிடித்து’ உருகிய பிள்ளைகள்.. நெகிழ்ச்சி சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காணாமல் போன தாயை 14 வருடங்களுக்கு பிறகு பிள்ளைகள் கண்டுபிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள கொரட்டாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் லூர்து மேரி. இவருக்கு குழந்தை இயேசு என்ற மகனும், ஞான அந்தோணி, ரேச்சல் லிஸியா என்ற இரு மகள்களும் உள்ளனர். இதில் ரேச்சல் லிஸியா பிறந்த சில மாதங்களில் தாய் லூர்து மேரி திடீரென காணாமல் போயுள்ளார். மனைவி காணாமல் போன அடுத்த ஆண்டே அவரது கணவரும் உயிரிழந்துள்ளார். அதனால் குழந்தைகள் மூவரும் உறவினர்களின் அரவணைப்பில் வளர்ந்துள்ளனர்.
இதனை அடுத்து 14 வருடங்கள் கடந்தோடிய நிலையில் தமிழகத்தை சேர்ந்த பாதிரியார் ஜான் லூயிஸ் என்பவர் மங்களூரில் உள்ள ஒயிட் டவ்ஸ் ஆதரவற்றோர் இல்லத்துக்கு சென்றுள்ளார். அப்போது இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பெண் ஒருவர் தமிழில் பேசுவதாகக் கூறி நிர்வாகிகள் பாதிரியாரிடம் அழைத்து சென்றுள்ளனர்.
கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் லூர்து மேரியை மீட்ட மங்களூரு போலீசார், அவரை ஒயிட் டவ்ஸ் என்ற ஆதரவு இல்லத்தில் ஒப்படைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த லூர்து மேரி தற்போது ஊர் பெயர் சொல்லும் அளவுக்கு தேறி இருப்பதாக நிர்வாகிகள் பாதிரியாரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பாதிரியாரிடம் பேசிய லூர்து மேரி, தன்னுடைய பெயரையும், ஊர் பெயரையும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து கிறிஸ்துவ அமைப்புகள் மூலமாக அந்த கிராமத்துக்கு பாதிரியார் தகவல் கொடுத்துள்ளார். தகவலை கேட்டதும் லூர்து மேரியின் பிள்ளைகள் உடனே மங்களூருக்கு விரைந்தனர்.
லூர்து மேரி காணாமல் போனபோது 9 வயது சிறுவனாக இருந்த குழந்தை இயேசு தற்போது ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். ஞான அந்தோணி கோவையில் பாரா மெடிக்கல் படித்து வருகிறார். பிறந்த சில மாதங்களிலியே தாயை பிரிந்த ரேச்சல் லிஸியா தற்போது 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் 14 வருடங்கள் கழித்து பிள்ளைகளைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் கண்ணீர் மல்க தனது குழந்தைகளை கட்டி அணைத்துள்ளார் லூர்து மேரி. பெற்ற பிள்ளைகளுடன் தாய் சேர்ந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது