'வீட்டுக்கு போய் கொண்டிருந்தவரை வழிமறித்து...' பத்து பேர் சுற்றி நின்று, அரிவாள், கத்தி, கம்பு, கடப்பாரையுடன்... கொடூரமான சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுக்கோட்டை மாவட்டம் காமராஜபுரத்தைச் சேர்ந்த வாலிபரை 10 பேர் கொண்ட மர்மக் கும்பல் கழுத்து, கை, கால், தலை என உடல் முழுவதும் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் காமராஜபுரம் 35-ம் வீதியைச் சேர்ந்த தர்மராஜ் மகன் சம்பத்குமார்(23). பிளஸ்2 வரையிலும் படித்த இவர் தினமும் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. வழக்கம்போல் நண்பர்களுடன் இருந்துவிட்டு முப்பத்து ஆறாவது வீதி வழியாக வீட்டிற்குச் சென்றபோது, அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல், சம்பத்குமாரை வழிமறித்தது. வழிமறித்த கும்பல் அரிவாள், கத்தி, கம்பு, கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களால் தலை, கை, கால் என உடல் முழுவதும் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பி ஓடியது. இதில், அவர் ரத்த வெள்ளத்திலேயே துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றித் தகவலறிந்த டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று சம்பத்தின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த கணேஷ் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீசார் விசாரணையில், சம்பத்குமார் மீது ஏற்கெனவே 2 குற்ற வழக்குகள் உள்ளதாகவும், சம்பத்குமாருக்கும் அவரது நண்பர்களாக இருந்த மதன், ஸ்ரீதர் உள்ளிட்டவர்களுக்கும் இடையே ஏற்கெனவே தகராறு இருந்ததாகவும் கூறப்படுகிறது. முன்விரோதம் காரணமாக சம்பத்குமார் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், தனிப்படைகள் அமைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
