‘யாரும் அத தொந்தரவு செய்யாதீங்க’!.. 2 நாட்களாக ஒரே இடத்தில் நிற்கும் ‘யானை’.. காண்போரை கலங்க வைத்த சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இறந்த குட்டியை விட்டுச்செல்ல மனமில்லாமல் தாய் யானை 2 நாட்களாக அதன் அருகிலேயே நிற்கும் சம்பவம் அனைவரையும் உருக வைத்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பள்ளிப்படி பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்துக்குள் மூன்று யானைகள் நீண்ட நேரமாக ஒரே இடத்தில் நின்றுகொண்டு இருந்துள்ளன. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனே வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானைகள் நின்ற பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு ஒரு குட்டியானை இறந்து கிடந்துள்ளது. இறந்த குட்டியை சுற்றி தாய் யானை மற்றும் மேலும் இரண்டு யானைகள் நிற்பது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து இறந்த குட்டியின் அருகில் சென்று வனத்துறையினர் பார்க்க முயற்சித்துள்ளனர். ஆனால் அவர்கள் யாரையும் அருகில் வர விடாமல் தாய் யானை துரத்தியுள்ளது. இதனால் குட்டியை மீட்கும் பணியை கைவிட்டு வனத்துறையினர் திரும்பினர். இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் காலை மீண்டும் குட்டி யானையின் உடலை மீட்க வனத்துறையினர் சென்றுள்ளனர்.
அப்போது தாய் யானை மட்டும் குட்டியின் அருகில் நின்றுகொண்டு இருந்துள்ளது. இதனால் இரண்டாவது நாளாக இறந்த குட்டியை மீட்க முடியாமல் வனத்துறையினர் திணறினர். இதனை அடுத்து தாய் யானை விலகி செல்லும் வரை அதை தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறையினர் முடிவெடுத்துள்ளனர். மேலும் யானையை கண்காணிக்க இரண்டு வனத்துறை பணியாளர்களை நியமித்துள்ளனர். குட்டியின் பிரிவை தாங்க முடியாமல் இரண்டு நாள்களாக இறந்த குட்டியின் அருகிலேயே தாய் யானை நிற்கும் சம்பவம் காண்போரை கலங்க வைத்துள்ளது.