‘வயலில் சடலமாக கிடந்த நிறைமாத கர்ப்பிணி’.. ‘ஓவர் ஆக்டிங்கால் சிக்கிய கணவர்’... வெளியான பகீர் தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Oct 24, 2019 10:06 PM

கர்ப்பிணி மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Dindigul Pregnant woman murder case husband arrested

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (26). இவரது மனைவி சுஷ்மிதா (20). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. 9 மாத கர்ப்பிணியான சுஷ்மிதா நேற்று வீட்டின் அருகே உள்ள வயலில் இறந்து கிடந்தார். கழுத்தில் அணிந்திருந்த நகைகள் இல்லாததாலும், காயங்கள் இருந்ததாலும் நகைக்காக கொலை செய்திருக்கலாம் என தினேஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனை அடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். நகைக்காக கொலை செய்யப்பட்டிருந்தால் கம்மல், கொலுசு, செல்போன் ஆகியவற்றை கொள்ளையன் விட்டு சென்றிருக்க வாய்ப்பில்லை என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. விசாரணையின் போது வார்த்தைக்கு வார்த்தை தினேஷ்குமார் மனைவியை நகைக்காக கொலை செய்துவிட்டனர் என தெரிவித்துள்ளார். இதனால் தினேஷ்குமாரிடம் போலீசார் கிடுக்குப்பிடி கேள்விகளை எழுப்பியுள்ளனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில், தினேஷ்குமாருக்கு வேடசந்தூர் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அப்பெண்ணுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த தகவல் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சுஷ்மிதாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் தினேஷ்குமாருக்கும், சுஷ்மிதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் சுஷ்மிதா தனது கணவரின் செல்போனை வாங்கி அடிக்கடி யாருக்கு போன் செய்துள்ளார்? என சோதித்து வந்துள்ளார். இதனால் தனது கள்ளகாதலியை பார்ப்பதை தினேஷ்குமார் தவிர்த்து வந்துள்ளார். ஆனாலும் தினேஷ்குமாருக்கு அப்பெண்ணிடம் இருந்து அடிக்கடி போன் வந்துள்ளது.

இந்நிலையில் கள்ளக்காதலியின் அறிவுரையின் பேரில் தனது மனைவியை தினேஷ்குமார் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். வேலைக்கு செல்வதுபோல் சென்றுவிட்டு மனைவி சுஷ்மிதாவை தனியாக வீட்டின் அருகில் உள்ள தோட்டத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனைவியை கொலை செய்துவிட்டு நகைக்காக யாரோ கொன்றுவிட்டனர் என தினேஷ்குமார் நாடகமாடியது தெரியவந்துள்ளது. இந்நிலையில் தினேஷ்குமாரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள கள்ளக்காதலியை தேடி வருகின்றனர்.

Tags : #CRIME #PREGNANT #WIFE #KILLED #HUSBAND #DINDIGUL