‘அண்ணனுடன் முறைதவறிய காதல்’.. ‘கண்டித்த அம்மா’.. இரும்பு கம்பியால் அடித்து கொன்ற 12ம் வகுப்பு மாணவி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Oct 20, 2019 04:32 PM

முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை மகளே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Minor girl, boyfriend held for killing her Mother in Thanjavur

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஒரு பெண், அங்கு உள்ள ஒரு ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார். அந்த பெண்ணின் கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர் 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு தாயும், மகளும் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர். அதிகாலையில் வீட்டில் ரத்த வெள்ளத்தில் தனது தாய் பிணமாக கிடப்பதாகவும், அவரை யாரோ அடித்துக்கொன்று விட்டதாகவும் மகள் அழுதுகொண்டே அக்கம், பக்கத்தினரிடம் தெரிவித்தார். உடனடியாக இதுகுறித்து அவர்கள் திருவையாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகள் அங்கிருந்து நழுவிச் சென்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகளை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து தெரிவித்த போலீசார், தாயை கொலை செய்த அந்த பெண்ணுக்கும், அவரது உறவுக்கார இளைஞர் ஒருவருக்கும் இடையே காதல் இருந்து வந்துள்ளது. ஆனால் அப்பெண்ணின் காதலர் மகளுக்கு அண்ணன் முறை என்பதை அறிந்த தாயார், நீ காதலிக்கும் பையன், உனக்கு அண்ணன் முறை ஆவார். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் நமது குடும்ப மானம் போய் விடும். எனவே நீ உடனடியாக இந்த காதலை கைவிட்டு விடு. இனிமேல் அந்த பையனை நீ சந்திக்காதே என கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதலர்கள் இருவரும் ஊரை விட்டு ஓடிவிட்டனர். இதுகுறித்து அந்த பெண்ணின் தாயார், திருவையாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மைனர் பெண்ணை கடத்திய வழக்கில் அந்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த வாலிபர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இதனை அடுத்து அந்த வாலிபர் தன் மீதான வழக்கை வாபஸ் பெறுமாறு அந்த பெண்ணின் தாயாரிடம் வற்புறுத்தி உள்ளார். அந்த பெண்ணும் தனது காதலனுக்கு ஆதரவாக தனது தாயாருக்கு தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து தாருங்கள் என்று அந்த வாலிபர், அந்த பெண்ணின் தாயாரிடம் கேட்டு உள்ளார். ஆனால் அவர் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இதுதொடர்பாக தாய் மகள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறின்போது ஆத்திரம் அடைந்த அந்த மகள் இரும்பு கம்பியால் தாயின் தலையில் அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் இந்த கொலையை மறைப்பதற்காக யாரோ தனது தாயை கொலை செய்துள்ளதாக அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பெண் மற்றும் காதலரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முறை தவறிய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இரும்பு கம்பியால் தாயை இளம்பெண் அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : #CRIME #DAUGHTER #KILLED #MOTHER #ILLEGALRELATIONSHIP #LOVE #BROTHER #TAMILNADU