சீனாவில் இருந்து... தமிழகத்தின் 'இந்த' மாவட்டங்களுக்கும் 'கொரோனா' வைரஸ் பரவியதா ?... மருத்துவர்கள் விளக்கம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Feb 04, 2020 01:51 AM

சீனாவை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருகிறது. இதனால் உலக மக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் குறித்த அச்சம் அதிகமாக இருக்கிறது. இதைத்தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன.

Did Villupuram medical student suffered by Coronavirus?

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்களில் இந்த வைரஸ் பரவியதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், மருத்துவர்கள் உண்மை நிலவரம் குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளனர். சீனாவில் மருத்துவம் படித்து வந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி கடந்த 1-ம் தேதி சொந்த ஊர் திரும்பினார். அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

சளி தொல்லை அதிகம் இருந்ததால் உடனடியாக அவரை முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குள்ள தனிவார்டில் வைத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. எனினும் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. பரிசோதனை முடிவுகள் வெளியானால் தான் அவருக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா? என்பது தெரியவரும்.

சீனாவில் சமையல் வேலை செய்து வந்த திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த 31-ம் தேதி சொந்த ஊர் திரும்பினார். நேற்று இரவு அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவர் சிகிச்சை பெற சென்றார். சீனாவில் இருந்து ஊர் திரும்பியவர் என தெரிந்ததும் டாக்டர்கள் அவரை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்புக்காக சேர்த்தனர்.

தொடர்ந்து அவரது ரத்தமாதிரி எடுக்கப்பட்டு கிண்டியில் உள்ள ரத்த பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருந்தாலும் இன்னும் 30 நாட்களுக்கு அவர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என மருத்துவமனை முதல்வர் முத்துக்குமரன் தெரிவித்து இருக்கிறார்.

இதேபோல சீனாவில் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்த வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த மாதவன்(35) என்பவர் கடந்த 28-ம் தேதி சென்னை-திருச்சி வழியாக விமானத்தில் வந்தார். இவருக்கு காய்ச்சல் இருந்ததால் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று கருதி அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் தனி வார்டில் மாதவன் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவரது ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் புனேயில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. தற்போது காய்ச்சல் குறைந்து நலமுடன் இருப்பதாக மருத்துவத்துறை துணை இயக்குநர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் தான் நலமுடன் இருப்பதாகவும், தன்னைப்பற்றி வரும் வாட்ஸ்அப் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மாதவன் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.