படத்துல ‘ஹீரோயின்’ ஆக்கறேன்னு சொன்னாரு... ‘சென்னை’ கொலையில் பெண்ணின் ‘அதிர்ச்சி’ வாக்குமூலம்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Saranya | Dec 30, 2019 06:45 PM
சென்னையில் துணை நடிகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சரணடைந்த பெண் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி தேவி - சங்கர். துணை நடிகையாக வேலை செய்துவந்த தேவிக்கு ரவி என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தேவி திடீரென அந்த உறவை துண்டித்ததால், ஆத்திரமடைந்த ரவி நேற்று இரவு அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தேவி, அவருடைய கணவர் சங்கர், தேவியின் சகோதரி லட்சுமி, அவருடைய கணவர் சவாரியா ஆகிய 4 பேரும் சேர்ந்து ரவியை உருட்டுக்கட்டையால் தாக்க, காயமடைந்த ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து தேவி, சங்கர் உட்பட 4 பேரும் நடந்ததைக் கூறி ராஜமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. போலீசாரிடம் தேவி அளித்துள்ள வாக்குமூலத்தில், “நான் சினிமா மற்றும் சீரியல்களில் துணை நடிகையாக நடித்து வருகிறேன். 8 ஆண்டுகளுக்கு முன் ஒரு படப்பிடிப்பின்போது எனக்கு துணை நடிகர் ரவியுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் நண்பர்களாக, ரவி அடிக்கடி என் வீட்டிற்கு என்னை சந்திக்க வருவார். அந்த சமயத்தில் சினிமாவில் இயக்குநராக முயற்சி செய்துகொண்டிருந்த ரவி, அவருடைய படத்தில் என்னை ஹீரோயின் ஆக்குவதாக உறுதியளித்திருந்தார். அதை நம்பி நானும் அவருடன் பழகினேன். ரவியுடனான நட்பால் என் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தபோதும், அதனால் எங்கள் பழக்கத்தில் எந்த விரிசலும் ஏற்படவில்லை.
பின்னர் சரிவர பட வாய்ப்புகள் இல்லாததால் மதுப்பழக்கத்திற்கு அடிமையான ரவி, குடித்துவிட்டு வந்து அடிக்கடி எனக்கு தொல்லை கொடுக்கத் தொடங்கினார். அதனால் நான் அவரை விட்டு விலகி, வேறு வீட்டிற்கு குடி போனேன். அப்போதும் எனக்கு விடாமல் தொல்லை கொடுத்துவந்த ரவி, நேற்று என் தங்கை வீட்டிற்கு சென்று பிரச்சனை செய்தார். அந்தத் தகவலறிந்து நானும், என் கணவரும் அங்கு சென்றபோது, அவர் என் தங்கை மகளின் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்தார். போராடி ரவியிடமிருந்து அவளை மீட்ட நாங்கள் அவரை கட்டையால் தாக்கினோம். குடிபோதையில் இருந்த அவர் மயங்கி கீழே விழுந்ததும் பயத்தில் நாங்கள் 4 பேரும் காவல் நிலையத்தில் சரணடைந்தோம்” எனத் தெரிவித்துள்ளார்.