'வெடி சத்தம் போல கேட்டுச்சு'...'பல்டி அடித்து உருக்குலைந்த கார்'... சென்னை அருகே நடந்த கோரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வேகமாக சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்து கவிழ்ந்ததில், சென்னையை சேர்ந்த போலீஸ்காரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை ஆயிரம்விளக்கு போலீஸ் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ். இவர், சென்னை ஜாம்பஜார் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவரும் செய்யாறு போலீஸ் நிலையத்தில் மதுவிலக்கு பிரிவு ஏட்டுவாக வேலை செய்து வரும் சன்னிலாயத் என்பவரும், நேற்று அதிகாலை செய்யாறில் இருந்து காரில் சென்னை நோக்கி வந்துகொண்டு இருந்தனர்.
காரை சன்னிலாயத் ஓட்டி வர, துரைராஜ் அவருக்கு அருகில் அமர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுங்குவார்சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் அருகே, கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென காரின் முன்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனை சற்றும் எதிர்பாராத சன்னிலாயத் காரை கட்டுப்படுத்த முயற்சி செய்தார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் பல்டி அடித்து கவிழ்ந்ததுடன், சுமார் 50 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டது.
அப்போது சாலை விரிவாக்கப்பணிக்காக சாலையோரம் கால்வாய் பாலம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்துக்குள் பாய்ந்த கார், வந்த வேகத்தில் பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி, பள்ளத்தில் தேங்கி நின்ற தண்ணீரில் கவிழ்ந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், ஓடிவந்து இருவரையும் மீட்டனர். ஆனால் போலீஸ்காரர் துரைராஜ், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயத்துடன் காருக்குள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சன்னிலாயதை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும்போது, காரின் டயர் வெடித்த போது, ஏதோ வெடி சத்தம் போல கேட்டது, என்னவென்று சுதாரிப்பதற்குள் இந்த கோர விபத்து நடந்து விட்டது என சோகத்துடன் கூறினார்கள்.
