'ரிசல்ட்ல கொரோனா பாசிட்டிவ்...' 'இறந்து மூன்று நாட்களுக்கு அப்புறம் தான்...' இறுதி சடங்கில் பங்கேற்றவர்களை தனிமைப்படுத்திய சுகாதாரத்துறை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சுவாச கோளாறால் உயிரிழந்ததாக கூறப்பட்ட முதியவரின் இரத்த பரிசோதனை முடிவுகளில் கொரோனா தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், முதியவரின் குடும்பத்தாரையும், கிராம மக்களையும் தனிமைப்படுத்தியுள்ளது சுகாதார துறை.
கடந்த 2ஆம் தேதி துபாய் சென்று வந்த 71 வயது முதியவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக சொல்லி, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனிமைப்படுத்தப்பட்ட முதியவரின் இரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்ய எடுக்கப்பட்ட நிலையில், முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலமணி நேரங்களிலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் முதியவர் சுவாசச் கோளாறு காரணமாக மூச்சு திணறல்
ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்தது. இதையடுத்து முதியவரின் பூதவுடல் ராமநாதபுரம் எடுத்து செல்லப்பட்டு, அவரது இறுதிச்சடங்கில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அடக்கம் செய்யப்பட்டு மூன்று நாட்களுக்கு பிறகு வந்த இரத்த மாதிரிகளின் பரிசோதனை முடிவில் முதியவருக்கு கொரோனா வைரஸ் இருந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியிடப்பட்டது. இதையடுத்து முதியவரின் உடலை எடுத்து சென்ற வாகன ஓட்டுநர் முதல் அவரது உறவினர்கள் மற்றும் இறுதி சடங்கில் பங்குபெற்றவர்கள் வரை அனைவரையும் தனிமைப்படுத்தி வருகிறது சுகாதாரத்துறை. மேலும் கீழக்கரையில் முதியோரின் வீடு மற்றும் அதைச் சுற்றியுள்ள 5 தெருக்களுக்கான பாதைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்து, முன்னெச்சரிக்கை பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். அப்பகுதியில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு, 24 மணிநேரமும் போலீசார் அப்பகுதியை கண்காணித்து வருகின்றனர்.