'பியர்ல் ஹார்பர் தாக்குதல்... இரட்டை கோபுரம் தகர்ப்பு போல.... மிக மோசமான துயரை அமெரிக்கா சந்திக்கும்!'... அமெரிக்க அரசு மருத்துவர் பரபரப்பு கருத்து!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Apr 06, 2020 12:03 PM

ஜப்பான் படையினர் நடத்திய பியர்ல் ஹார்பர் தாக்குதல், நியூயார்க் இரட்டை கோபுரம் தகர்ப்பு ஆகியவற்றின் போது அமெரிக்க மக்கள் சந்தித்த துயர நிலையை மக்கள் இந்த வாரம் சந்திக்கப் போகிறார்கள் என்று அமெரிக்க அரசின் தலைமை அறுவைசிகிச்சை நிபுணர் ஜெரோம் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்

usa will face extreme crisis in this says dr jerome covid19

உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸால் ஒவ்வொரு நாடும் பெரும் அச்சத்தில் இருக்கின்றது. இதில், அமெரிக்கா கொரோனா வைரஸின் தாக்குதலுக்கு கடுமையான பாதிப்பை நாள்தோறும் சந்தித்து வருகிறது. அங்கு இதுவரை 3.36 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 9,616 பேர் உயிரிழந்துள்ளனர். நியூயார்க் நகரில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளார்கள்.

இந்நிலையில், அடுத்துவரும் இரு வாரங்கள் அமெரிக்க மக்களுக்கு மோசமானதாக இருக்கும் என்பதால் வீட்டுக்குள்ளே இருக்க வேண்டும், சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும், சுத்தமாக இருக்க வேண்டும் என அதிபர் ட்ரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரல் வைஸ் அட்மிரல் மருத்துவர் ஜெரோம் ஆடம்ஸ் நேற்று மக்களுக்கு மிகப்பெரிய எச்சரிக்கை விடுத்து பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:

அமெரிக்க வரலாற்றில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று மிகப்பெரிய இருண்ட சம்பவங்களை உருவாக்கப்போகிறது. இதற்குமுன் அமெரிக்கா இரு மோசமான சம்பவங்களைத்தான் வரலாற்றில் கண்டது.

ஒன்று ஜப்பானிய படையின் பியர்ல் ஹார்பர் தாக்குதல், இரண்டாவது தீவிரவாதிகளின் செப்டம்பர் 11, நியூயார்க் இரட்டை கோபுரம் தாக்குதல். அதன்பின் எதையும் மக்கள் பார்க்கவில்லை.

ஆனால் அடுத்தவாரம் பியரல் ஹார்பர், இரட்டை கோபுரம் தாக்குதலில் மக்கள் அனுபவித்த வேதனைகளைப் போன்று அனுபவிக்கப்போகிறார்கள். மிகமோசமான சம்பவங்கள், அமெரிக்க மக்கள் வாழ்க்கையில் சந்தித்திராத கடினமான சம்பவங்களை எதிர்கொள்ளப்போகிறார்கள்.

இந்த சூழலை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த கொரோனா வைரஸ் வளைவு கோட்டை நாம் மட்டப்படுத்த வேண்டுமானால், அனைவரி்ன் பங்களிப்பும் அவசியமானதாகும். 90 சதவீத அமெரிக்கர்கள் தங்கள் பங்களிப்பை செய்து வருகிறார்கள். மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் அடுத்த 30 நாட்களுக்கு நாங்கள் அளிக்கும் விதிமுறைகளை மக்கள் தீவிரமாக கடைபிடிக்க ஊக்கமளிக்க வேண்டும். அதுதான் இப்போது தேவை, மாநிலங்கள் தங்களுக்குள் என்ன முடியுமோ அதைச்செய்து கொள்ளுங்கள்

இந்த வாரம் நிச்சயம் நமக்கு மோசமான வாரமாக இருக்கும், நமது வாழ்க்கையில் காணாத மோசமான அனுபவங்களை சந்திப்போம். வாஷிங்டன், கலிபோர்னியா மோசமான உயிரிழப்பு இருக்கும். இதைத் தவிர்க்க அமெரி்க்க மக்கள் வீ்ட்டுக்குள் இருக்க வேண்டும்.

இவ்வாறு ஆடம்ஸ் தெரிவித்தார்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கணிப்பின்டி அடுத்து வரும் வாரங்களில் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் அமெரிக்க மக்கள் உயிரிழக்கக் கூடும் என எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.