'தீபம்' ஏத்துனா கொரோனா செத்துருமா?... பிரதமரை அவதூறாக பேசி... 'வீடியோ' வெளியிட்ட இளைஞர்கள் கைது!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தீபம் ஏத்தினால் கொரோனா சாகுமா? என பிரதமரை ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட 5 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதற்கிடையில் பிரதமர் மோடி,''இந்தியா முழுவதும் ஊரடங்கில் உள்ள அனைத்து மக்களும் இன்றிரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள மின்விளக்குகளை அணைத்து விட்டு 9 நிமிடங்கள் தீபம், மெழுகுவர்த்தி ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும், '' என கேட்டுக்கொண்டார். அதன்படி நாடு முழுவதும் உள்ள மக்கள் தீபம், மெழுகுவர்த்தி ஏற்றி தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
பிரதமர் மோடியின் இந்த வேண்டுகோளை ஆதரித்தும், எதிர்த்தும் நெட்டிசன்கள் தங்களது கருத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடியை ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டதாக கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள 5 இளைஞர்களை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
நிதின், அபிஷ் மனு, விஜின், பவின், நிஷாந்த் என்ற 5 இளைஞர்களும் தீபம் ஏற்றினால் கொரோனா சாகுமா? என பிரதமர் மோடியை ஆபாசமாக பேசி 46 விநாடிகள் கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவ அவர்களை கைது செய்ய வேண்டும் என கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்தன. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் கைது செய்த போலீசார் இதுகுறித்து அவர்கள் 5 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
