‘நான் எந்த தப்பும் பண்ணல’.. ‘என் மேல் வீண்பழி போடுறாங்க’.. சென்னை வாலிபர் எடுத்த முடிவு.. நொறுங்கிப்போன குடும்பம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 24, 2020 05:06 PM

சென்னையில் பட்டதாரி இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chennai 21 year old youth commits suicide near Taramani

சென்னை தரமணி பெரியார் நகரில் உள்ள கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் விஜய் (21). பிசிஏ பட்டதாரியான இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். குடும்பச்சுமை காரணமாக இரவு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பகுதி நேர வேலை பார்த்து வந்துள்ளார். இதன்மூலம் குடும்ப தேவைகளை சமாளித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்றிரவு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது அப்பகுதியில் உள்ள பெண்ணை விஜய் தனது செல்போனில் படம் பிடித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இந்த தகவல் அப்பகுதியில் வேகமாக பரவியது. உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விஜய்யிடம் விசாரித்துள்ளனர். அப்போது, நான் யாரையும் செல்போனில் படம் எடுக்கவில்லை. வேண்டுமென்றால் என் செல்போனை சோதனை செய்து பாருங்கள் என தெரிவித்துள்ளார்.

ஆனால் அப்போது ஆத்திரத்தில் சிலர் விஜய்யை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனால் விஜய் தரமணி காவல் நிலையத்துக்கு செல்போனில் தகவல் கொடுத்துள்ளார். உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், விஜய்யிடம் இருந்த செல்போனை கைப்பற்றி சோதனை செய்துள்ளனர். பின்னர் செல்போனில் தவறான வீடியோ, போட்டோ ஏதும் இல்லை என போலீசார் அங்கிருந்தவர்களிடம் தெரிவித்து சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர்.

இதனை அடுத்து வீட்டுக்கு சென்ற விஜய் நடந்த சம்பவத்தை அம்மாவிடம் கூறி வேதனையடைந்துள்ளார். அப்போது தான் எந்த தவறும் செய்யவில்லை, தன்மீது வீண்பழி சுமத்துகிறார்கள் என கூறி கதறி அழுதுள்ளார். அப்போது விஜய்யின் குடும்பத்தினர் அவருக்கு ஆறுதல் சொல்லியுள்ளனர். இந்த நிலையில் மறுநாள் காலை விஜய் தனது அறையில் இருந்து நீண்ட நேரமாக எழுந்து வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது விஜய் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து சடலமாக தொங்கியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து வந்த போலீசார் விஜய்யின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் இதுகுறித்து இளைஞரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Tags : #SUICIDEATTEMPT #CHENNAI #YOUTH