'மனசாட்சியே இல்லாம இப்படி பண்றீங்க'... 'அதிர்ந்து நின்ற அதிகாரி'... சென்னையில் நடந்த அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தொடாமலேயே காய்ச்சலை கண்டுபிடிக்கும் தெர்மா மீட்டரை, சுகாதார துறை அதிகரியிடமே அதிக விலைக்கு பேரம் பேசிய சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக, முக கவசம், கை கழுவும் சானிடைசர் கிருமி நாசினி போன்றவற்றை மக்கள் பரவலாக உபயோகிக்க தொடங்கியுள்ளார்கள். இதனால் தமிழகத்தில் அதற்கான தேவை அதிகரித்துள்ளது. இதை பயன்படுத்தி சிலர் அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து இவற்றை அத்தியாவசிய பொருட்களாக அரசு அறிவித்துள்ளது. கூடுதல் விலைக்கு யாரேனும் பதுக்கி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை திருவல்லிக்கேணி ஓமந்துரார் பல்நோக்கு அரசு மருத்துவமனைக்கு அருகில் செயல்படும் மருந்து கடையில், காய்ச்சலை கண்டுபிடிக்கும் இன்ப்ராரெட் தெர்மா மீட்டர் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டு அதிக விலைக்கு விற்பதாக சுகாதாரதுறை அதிகாரிகளுக்கு இரவில் தகவல் கிடைத்தது. உடனே உடனே சுகாதாரதுறையினர் ஐ.ஏ.எஸ். அதிகாரி செந்தில்ராஜ் தலைமையில் குறிப்பிட்ட மருந்து கடைக்கு விரைந்தனர்.
அங்கு சென்ற அதிகாரிகள் சுகாதாரதுறைக்கு தெர்மா மீட்டர், முககவசம் தேவைப்படுவதாக கூறி அதற்காக விலையினை கேட்டுள்ளார். அதற்கு கடை உரிமையாளர் ரூ.2800-க்கு விற்க வேண்டிய இன்ப்ரா-ரெட் தெர்மா மீட்டரை (ஒரு நபரை தொடாமல் காய்ச்சல் கண்டுபிடிக்கும் கருவி) ரூ.15 ஆயிரத்துக்கு விலை சொன்னார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த கடையில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அதிகாரிகள் நடத்திய சோதனையில், அங்கு ஏராளமான முக கவசம், தெர்மா மீட்டர் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.
உடனே மருந்து கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள், பொது சுகாதார சட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி அதிக விலைக்கு விற்றதாக கடை உரிமையாளர் மீது வழக்குபதிவு செய்தனர். கொரோனா அச்சத்தை பயன்படுத்தி இதுபோன்ற நேரத்தில் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.