சென்னையில் பரபரப்பு!... கொரோனா சிகிச்சை வார்டில்... 'ரோபோ'க்கள் அறிமுகம் செய்ய ஏற்பாடு!... என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Mar 24, 2020 03:40 PM

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை வார்டில் நோயாளிகளுக்கு மருந்து, உணவு வழங்க ரோபோக்கள் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

robots to be introduced in covid19 ward of rggh chennai

கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்களுடன் நேரடி தொடர்பு வைத்திருந்தால், அவர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இருப்பதை குறைப்பதற்கு, தொழில்நுட்ப ரீதியில் தீர்வு காண சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ராஜீவ்காந்தி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஜெயந்தி கூறியதாவது:-

கொரோனாவை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சிறப்பு வார்டுகள் உயர் தொழில் நுட்ப மருத்துவ வசதி ஆகியவை தயார் நிலையில் உள்ளன.

மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள், பணியாளர்கள் கொரோனா நோயாளிகளுக்கு தண்ணீர், உணவு, மாத்திரை மருந்து வழங்குவதற்காக தினமும் நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இருக்க வேண்டியுள்ளது.

இதை ஓரளவு தவிர்க்க தொழில் நுட்ப ரீதியிலான திர்வை ஏற்படுத்த முடிவு செய்தோம். அதன்படி ரோப்போக்களை இந்த பணியில் ஈடுபடுத்தலாம் என திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக பயன்படுத்தப்படும் ரோபோக்கள் நோயாளிகள் இருக்கும் அறைக்கு முன் சென்றதும் ஒலி எழுப்பும். நோயாளி கதவை திறந்து ரோபோவிடம் இருந்து மருந்து, உணவு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். மருத்துவர்களும், செவிலியர்களும், ரோபோவில் வடிவமைக்கப்பட்டிருக்கும் திரையில் தெரியும் வீடியோ அழைப்பின் மூலம் நோயாளிகளுக்கு தேவையான அறிவுரைகளை வழங்குவார்கள்.

நோயாளிகளுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் ரோபோ மூலம் டாக்டரிடம் கேட்கலாம். ரோபோ தனி வார்டில் இருந்து வெளியே வந்தவுடன் அந்த இடம் சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்தப்படும்.

ரோபோக்களை பயன்படுத்துவதால், செவிலியர்களும், மருத்துவ பணியாளர்களும் மருத்துவ சேவைகள் மற்றும் மருத்துவ அவசர தேவைகளுக்கு மட்டும் நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இருந்தால் போதும். இந்த ரோபோக்களை சென்னை இந்துஸ்தான் கல்வி நிறுவனத்தில் ‘ரோபோ’ துறையினர் வடிவைமைத்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags : #CHENNAI #RGGH #CORONAVIRUS #ROBOT