'கொரோனா இல்லன்னு சான்றிதழ் கொடுக்க சொல்றாங்க'...'சோகமாக நின்ற சென்னை ஊழியர்'...அமைச்சர் விளக்கம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தங்கள் அலுவலகத்தில் கொரோனா இல்லை என்று சான்றிதழ் வாங்கி வர சொன்னதாக, தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் யாரெல்லாம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பது குறித்தும் அவர் விளக்கமளித்துள்ளார்.

சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் தி.மு.க. உறுப்பினர் பொன்முடி, ‘கொரோனா வைரஸ் பரிசோதனையை தனியார் மருத்துவமனையும் செய்ய அனுமதி வழங்கப்படுமா? என்று துணைக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், ''எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக சட்டசபையில் பேசியிருக்கிறார். பொதுவாக ஒரு பரிசோதனை மையத்தில் நாளொன்றுக்கு 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடியும். ராஜீவ்காந்தி மருத்துவமனையிலும் கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்க உள்ளது.
தமிழகத்தில் 5 இடங்களில் உள்ள பரிசோதனை கூடங்களில் நாளொன்றுக்கு 500 பேருக்கு பரிசோதனை செய்ய முடியும். அப்பல்லோ, வேலூர் சி.எம்.சி. போன்ற சிறப்பான வசதி கொண்ட தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய ஐ.சி.எம்.ஆர். அனுமதி பெற்று அனுமதிக்கப்படும். இதற்கிடையே ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நான் திடீர் ஆய்வு மேற்கொண்டேன். அப்போது தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், தனக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய வேண்டும் என்று டாக்டரிடம் கேட்டு கொண்டிருந்தார்.
அப்போது அவரிடம் நீங்கள் நோய் பாதித்த நாடுகளுக்கோ, மாநிலங்களுக்கோ சென்று வந்திருக்கிறீர்களா? என்று கேட்கப்பட்டது. அவர் இல்லை என்று சொன்னார். ஆனால் தங்கள் அலுவலகத்தில் இதுபோன்ற சான்றிதழ் வாங்கி வர சொல்லியிருப்பதாக அவர் சொன்னார். அதே நேரத்தில் அந்த ஊழியருக்கு, இருமல், காய்ச்சல், மூச்சு திணறல் போன்ற எந்த அறிகுறியும் இல்லை. இந்த 3 அறிகுறிகள் இருந்தால் மட்டுமே கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படும் என அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
அதேநேரத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகள் மற்றும் மாநிலங்களுக்கு சென்று வந்தவர்கள்தான் கண்டிப்பாக சோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் விளக்கமளித்துள்ளார்.
